மாத்தி யோசி!.
நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர் நிறுத்தியிருந்த பேருந்தின் பின் புற மறைவில் சிறு நீர் கழித்தார்.
திடீரென ஒரு வாலிபன் முளைத்து ஏதோ சைகையால் உணர்த்தினான்.
புரியாததால், ஜிப்பைப் போட்டுக் கொண்டு அவனிடம் சென்றார்.
” என்னப்பா ஏதோ ஜாடை காட்டினாயே ..என்ன சமாச்சாரம்?”
“யாராச்சும் பஸ் ஓரத்தில் அசிங்கம் பண்ணுவாங்களா?’ என்றான்
”மழை, குளிர் சீஸன். நான் சுகர் உள்ளவன்..அவசரம் என்ன பண்ணனும்கிற?”
”தபாரு..வண்டி எனக்கு தெய்வம் மாதிரி..அதில தெறிக்க விடுறது நாயமா?”
”என்னமோ தெய்வ குத்தம் ஆன மாதிரி பேசுறே?”
”என் கோபத்தைக் கிளறாதே, அப்புறம் வேற மாதிரி ஆகிடும்..”
“இந்த பூச்சாண்டி எல்லாம் எங்கிட்ட காட்டாதே..”
“வயசுல பெரியவர் ஆச்சேன்னு விடுறேன்..மிச்சம் இருக்கிற பல்லு பத்திரம்!”
என அடிக்கப் பாய்பவன் போல முகத்துக்கு நேரே முஷ்டியை முறுக்கினான்.
பெரியவர் அகன்றதும், தன் விசுவாசம் மற்றும் சாமர்த்தியத்தை சூபர்வைசரிடம் பெருமையாக ஒரு வரி விடாமல் சொன்னான்.
அதற்கு அவரளித்த மறுமொழி அவனைச் சங்கடத்தில் ஆழ்த்தியது.
“டிரைவரே..நம்ம காலேஜ் வண்டியை ரோட்டோரத்தில் நிறுத்தி இருக்கிறாய்..
அது அவங்க ஏரியா.. இரவில் டயரை குத்திக் கிழிச்சாலோ, கும்பலா வந்து, வண்டிக்கு சேதம் விளைவிச்சாலோ உன்னால என்னை பண்ண முடியும்? பொத்திக்கிட்டு சூதானமா நடந்துக்க..உன் மேதாவித் தனத்தை எல்லாம் அங்கே காட்டாதே... புரிஞ்சுதா?” என கூறியதும் அவன் முகம் ஊசியால் குத்திய பலூன் போல சுருங்கி விட்டது.
-பி. பழனி, சென்னை.