சுந்தர் எது நடக்கக்கூடாதென்று நினைத்தானோ அதுவே நடந்திடுச்சு.
அம்மாவின் நச்சரிப்புக்காக கிராமத்தில் "இப்பவோ... அப்பவோ"ன்னு இழுத்துகிட்டிருந்த பாட்டியை பார்க்க வந்தான்.
சாகப் போற கெழவி கடைசி நேரத்தில் சுந்தரின் கையையும், அவனது பெரிய மாமன் மகளான கனகாவின் கையையும் ஒன்று சேர்த்துப் பிடித்தபடி மரணிக்க,
"ஆஹா... ஆத்தா தன்னோட கடைசி ஆசையைத் தெரிவிச்சிட்டுப் போயிட்டா இதுக ரெண்டையும் சேர்த்து வச்சாத்தான் அவ ஆத்மா சாந்தியடையும்" உறவுக்காரக் கிழவியொருத்தி கூப்பாடு போட, எல்லோரும் அதை ஆமோதித்தனர்.
சுந்தர் ஆடிப் போனான். பெங்களூரில் அவனுடன் ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் அவன் காதலி ரம்யா ஞாபகத்தில் வந்து அவனைக் கலவரமூட்டினாள்.
"என்ன செய்வது?... எப்படி இதிலிருந்து தப்பிப்பது?" யோசித்தவாறே தனியே சென்று அமர்ந்து கொண்டான் சுந்தர்.
அவனது பெரிய மாமன் மனைவி ராக்கம்மா அவனுக்கு அவ்வப்போது காப்பி... டீ... என்று முழு ஈடுபாட்டோடு சப்ளை செய்தாள்.
"கடவுளே... நீ தான் என்னைக் காப்பாத்தணும்... என்னோட பெரிய மாமனைப் பார்த்தாலே பயமாயிருக்கு!... அவரது ஆட்டுக்கிடா மீசையும்... மிளகாய்ச் சிவப்புக் கண்களும்... நான் மட்டும் அவர் மகளைக் கட்டிக்க மாட்டேன்னு சொன்னா கண்டிப்பா என்னை வெட்டியே போட்டுவார்... அவருடைய ஆட்கள் எல்லோருமே சினிமாவில் வரும் முரட்டு அடியாட்கள் மாதிரியே இருக்கானுங்க!". உள்ளுக்குள் அழுதான்.
அப்போது அவனை நெருங்கி வந்து அமர்ந்தார் மீசைக்கார பெரிய மாமன். "
போச்சுடா... எப்ப மாப்ள கல்யாணத்தை வெச்சுக்கலாம்?னு கேட்கப் போறார் போலிருக்கு.... ஐயோ நான் என்ன பண்ணுவேன்?"
"மாப்ள... ஆத்தா செஞ்சிட்டுப் போன வேலையை நீங்க ஒண்ணும் பெருசா எடுத்துக்க வேண்டாம்!... ஆத்தாவுக்கு என்ன தெரியும்?... சாதாரண கிராமத்துக் கெழவி!... நீங்க கம்ப்யூட்டர் படிப்பெல்லாம் படிச்சிட்டு... பெங்களூர்ல பெரிய உத்தியோகத்தில் இருக்கீங்க.... எட்டாங்கிளாஸ் கூட தாண்டாதவள் என் மகள்... அவளையும் உங்களையும் எப்படி சேர்த்து வைத்துப் பார்க்க முடியும்?... ஆத்தா செஞ்சிட்டு போனதை நீங்க மறந்துடுங்க மாப்ள!"
நேருக்கு நேர் அவரை பார்த்துக் கையெடுத்து கும்பிட்டான் சுந்தர்.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்