ஊர் நிறையவே மாறியிருந்தது.
இது என்னுடைய. ஊர்
தானா என்பதை நினைக்கும் போதே ஆச்சர்யமாக இருந்தது.
டவுனிலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில்
பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது கிராமம். மழைக் காலத்தில் அந்த
சாலையில் நடந்து செல்வதற்குள் நாக்கு வெளியே தள்ளிவிடும்.
நான் ஊரை விட்டுச் சென்ற இந்த குறுகிய காலத்துக்குள் தார் சாலையும் புதிதாக சில பள்ளிகளும் நிழற்கூடங்களும் முளைத்திருந்தன
நண்பன் மூர்த்திக்கு திருமணம். நான் வேலை பார்க்கும் ஊருக்கே வந்து பத்திரிகை வைத்து அழைத்தான். திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும்போதே ஊரைப் பார்க்கும் ஆவலில் வந்துவிட்டேன்.
பால்ய சினேகிதர்கள் வந்து வரவேற்பார்கள் என்று நினைத்துச் சென்ற என் எண்ணத்தில் மண் விழுந்தது.ஒருவரையும் காணோம் .
எதிர்ப்பட்ட ஒன்றிரண்டு பெரியவர்களும் பார்த்தும் பார்க்காத மாதிரி சென்றார்கள்.
சிறிது தூரம் சென்றதும்
அந்த வேப்ப மரம் கண்ணில் பட்டது.இதில்தானே என்னைக் கட்டி வைத்து அடித்தார்கள்? குப்புசாமி வீட்டு தென்னை மரத்தில் ஏறி பல நாட்களாக தேங்காயைப் பறித்து
விற்று சினிமாவுக்குப் போகும் விஷயத்தை நண்பன் ஒருவன் ஊர் பெருசுகளிடம் போட்டுக் கொடுக்க என்னைக் கட்டி வைத்து 'நார் உரித்து விட்டார்கள் .' அந்த அவமானத்தில் ஊரை விட்டுப் போனவன் இன்று தான் திரும்புகிறேன்.
திருமணம். "துரை! உனக்கு ஊருக்கு பத்திரிகை வச்சிட்டனே ஒழிய 'அந்த சம்பவத்தை ' மனசுல வச்சிக்கிட்டு நீ வர மாட்டேன்னு தான் நினைச்சேன் " என்று மூர்த்தி கூற
சவுக்கடி பட்டது போல் உணர்ந்தேன்.
காலம் மாறிவிட்டது. நாகரீகம் மாறி விட்டது. ஊர் எவ்வளவோ மாறி விட்டது. ஆனால் ஊரில் இருந்த மனிதர்கள் மட்டும் மாறவே இல்லை இன்று நான் ஓரளவு வசதியாக இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை நான் அந்த பழைய 'தேங்காய் திருடன் துரை' தான். உண்மை புரிந்ததும் கல்யாண வீட்டில் சாப்பிடாமலேயே அடுத்த பஸ்ஸில் 'சொந்த 'ஊருக்கு கிளம்பினேன்.
மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903
9080680858
9159423090