tamilnadu epaper

முகம் காட்டா அழகிகள்

முகம் காட்டா அழகிகள்



அது ஒரு கிராமம்.‌அந்த கிராமத்தின் எல்லை பகுதியில் ஒரு வீடு.அதில் அக்கா தங்கை இருவர் வாழ்ந்தனர். யாரும் அவர்களைப் பார்த்தது கிடையாது.


குரல் மட்டுமே கேட்டிருந்தோம். ஏன் அவர்கள் வெளிவருவதில்லை. "அப்போதெல்லாம் மாயாஜாலக் கதைகளில் வரும் தேவதைகளோ இவர்கள்!" என்று தோன்றும்.


"எப்படியாவது பார்த்துவிட வேண்டும்!"என்று தோன்றியது. 


"இதெல்லாம் வேண்டாம் ரெம்ப ரிங்ஸ். இதே மாதிரிதான் நிறையப் பேர் முயற்சி செய்து செத்துட்டாங்க வேணாடாம்டா!" என நண்பர்கள் அறிவுரை.


இருந்தாலும் பயம் தலைகாட்டவே தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்.


காலையில் வாக்கிங் என்ற பெயரில்‌ அந்த வீட்டுவரைப் போவோம். என்னைப் போல் நிறையப் பேருக்கு அவளைப் பார்க்க ஆசைபோலும்.


அழகான மணம் அந்த வீட்டைக் கடக்கும் போது வீசும். "ஏன்?இவர்கள் யாரையும் பார்க்காமல் இருக்கிறார்கள்?".


"படையப்பா ரம்யாகிருஷ்ணனோ?" என்று தோன்றும். "இவர்களுக்கும் ஏதாவது காதல் தோல்வி?!" என இருக்குமோ?


அவர்கள் வயதைக் கூடத் தெரிந்தவர்கள் இல்லை அந்த கிராமத்தில். ஏன் இவர்கள் இருவரும் ஒரு வீட்டில் இருக்கிறார்கள்? திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை?..


கேள்விகள் மட்டுமே சப்தமாக கேட்டப்பட்டது. பதில் மௌனமாகவே இருந்தது.


அப்போதுதான் அந்த கிராமத்திற்கு ஒரு குடும்பம் வந்தது. அவர்கள் இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள். இப்போது திரும்பவும் தன் மீதி நாட்களைக் கழிக்க வந்தார்கள் எனத் தெரிந்து கொண்டேன்.


அவர்களோடு அவர்களுக்கு உதவி செய்து ஒட்டிக் கொண்டேன். முக்கியமாக அந்த பாட்டியிடம்.


அவங்களுக்கும் என்னைப் பிடித்துப் போனதால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் பேசும் நேரம் அதிகரித்துக் கொண்டே வந்தது.


ஒருநாள் இந்த கிராமத்தில் கடைசி வீட்டில் இருக்கும் முகம் தெரியாத அழகிகள் பற்றிய பேச்சு வந்தது.


அந்தப் பாட்டியின் முகம் இறுகியது.‌ நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.


"அவர்கள் இருவரும் அழகான இளைஞர்கள்.‌ இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல் இருபார்கள். சில மாதங்களுக்குள் அவர்களது நடை உடை பாவனைகள் மாற ஆரம்பிக்க, கிராமத்தில் அப்போதெல்லாம் இவர்களைத்   

திருநங்கைகள் என்றோ அவர்களும் நம்மில்‌ஒருவர் என்றோ உணரப்படாத காலம். இவர்களுடைய செய்கைகள் பிடிக்காமல் இவர்களை அரவாணிகள் எனக் கூப்பிட்டு அவர்களுக்கு மனச்சிதைவை ஏற்படுத்தினர். அதனால் கிராமத் தலைவர்கள் இவர்களுக்கு இந்த ஒதுக்குப்புற வீட்டைக் கொடுத்து யார் கண்ணிலும் படக்கூடாது என்று தீர்ப்பு சொன்னார்கள்..

அதிலிருந்து இந்த வீட்டில்தான் இருந்தார்கள். இப்போ எப்படி இருப்பார்களோ தெரியாதே!" என்றாள்.


திருநங்கை என்றவுடன் எனக்கு அவர்களைப் பார்த்து, இப்போது கால மாற்றத்தால் அவர்களை வெளிக் கொணர வேண்டும் என உத்வேகம் எழ, அவர்கள் வீட்டை நோக்கி நடந்தேன்.



-பானுமதி நாச்சியார் சிவகிரி