என்ன... செண்பகவள்ளி.. எங்கேயோ புறப்பட்டாப்ல இருக்கு..நான் பயணத்தடையா வந்துட்டேனா.?!". "அட ..இல்ல மாரியக்கா..வராதவுக வர்றீங்களே...என்னவா இருக்கும்னு தயக்கமா" />
tamilnadu epaper

முற்பகல் செய்யின்

முற்பகல் செய்யின்

"என்ன... செண்பகவள்ளி.. எங்கேயோ புறப்பட்டாப்ல இருக்கு..நான் பயணத்தடையா வந்துட்டேனா.?!". "அட ..இல்ல மாரியக்கா..வராதவுக வர்றீங்களே...என்னவா இருக்கும்னு தயக்கமா நின்னுட்டேன்..வாங்க என்ன காரியமா வந்தீங்க.?கொஞ்ச நேரம் இருங்க.. காபித்தண்ணீ போட்டு எடுத்துவர்றேன்..!". " அதெல்லாம் இருக்கட்டும் செண்பகம்...முக்கியமான காரியம் ஒண்ணு உன்னால தான் ஆகனும்.. அதொண்ணுமில்ல..ஊருபூரா வட்டிக்கு குடுத்து..வம்படியா வசூல் பண்ணி..திம்பமா வாழுறா மாரியம்மான்னு எல்லோரும் நினைக்குறாங்க... ஆனா பாரு ஊரு முழுக்க ஏழு எட்டாயிரம் வட்டிக்காசே வரனும்..ஊருக்குள்ள மழைமாரி பேஞ்சு கெடுக்குது...இல்ல காஞ்சு கெடுக்குது... வேலைவித்துமில்ல...வேலை கிடைச்சா கூலியுமில்ல.. ஒட்டுக்குப் பத்து விளைச்சல் இருந்தாலும் ஒழுங்கா வீடுவந்து சேருமான்னு.. தெரியல..இதுல வட்டிக்காசை கொடுத்துட்டு சோறு திண்ணுன்னு சொல்ல..நான் என மைக்ரோ பைனான்ஸா நடத்துறேன்..இப்ப கூடப்பாரு ஒரு முக்கியமான சொந்தக்காரர் வீட்டு கல்யாணம்.. குறைச்சலா ரெண்டாயிரத்தி ஒன்னு மொய்யும்.. கைச்செலவுக்கு ஐநூறும் வேணும்..". "ஒரு ரெண்டாயிரத்து ஐநூறு கொடுத்தீன்னா..ரெண்டு நாள்ல பேத்துமாத்து பண்ணி கொடுத்துடுவேன்... இதை மட்டும் உன்னோட பொறந்த பொறப்பா நெனச்சு செய்யீ..செண்பகம்.!". " என்னக்கா..இது...ஊருக்கே குடுத்து உதவுற மகராசி நீங்க..இந்த நாதியத்தவ வாசல்தேடி வந்து கேட்குற..ஏதோ நீ வந்த நேரம் பருத்தி பொடவையா காய்ச்சி நிக்குது..காலையில காபித்தூள் கூட கடனாத்தான் வாங்கப்போனேன்.. சுலைமான் பாய் கடைக்கு..". "அவரு தான் சொன்னாரு..‌ என்னக்கா அதான் நிலத்துக்குகெல்லாம் நிவாரணப் பணம் போட்டிருக்காங்களே...பணத்தை எடுத்து தாராளமா செலவு செய்யுங்கன்னு... ஏராளமா கடனை வாங்கி நடவு நட்டு...அடுகேடா சாஞ்சு அழுகிப்போச்சே.. இந்த வருசம் வாயில்லா சீவன்களுக்கு கூட வைக்கோல் கூலம் கெடக்காது போலருக்கே..". " இந்த சுலைமான் எகுத்தாளமா பேசுறானே.. என்னன்னு தான் பார்ப்பமேன்னு பேங்குக்கு போனேனா..பார்த்தா மூவாயிரம் வந்திருந்துது". "அந்த அஞ்சலை மருமவ இருக்காளே..அவ ஆறு ஏழு நாளு களைபறிச்சி..அள்ளிமாத்திகிட்டு கெடந்தா..பாதவத்தி ஒத்தையா மாரடிச்சிகிட்டு கெடந்தாளே..நம்ம கஷ்டத்தை நினைச்சு ரெண்டு மாசம் பொறுத்தாளேன்னு ...அவளுக்கு ரெண்டாயிரத்தை தரலாம்னு தான் புறப்பட்டேன்.". " நீங்க வராதவுக வந்து கேக்குறீங்க.. இந்தாங்க...ரெண்டு மாசம் பொறுத்தவ இன்னும் ரெண்டுநாளு பொறுக்க மாட்டாளா.?நீங்க போயி ஆகுற வேலைய பாருங்க.!"என்றாள் செண்பகம். ********** *கையில் பணம் கிடைத்ததும் நயவஞ்சக சிரிப்போடு வீடு திரும்பினாள் மாரியம்மாள். 'அந்த அஞ்சலை மருமகள் மான் மானாக ஏழெட்டு கெடாயும்.. கொராலுமாக வச்சிருக்கா..எம்மவ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செய்ய கெடா வாங்கிக்குடுன்னு சொன்னாளேன்னு கேட்குறேன்.. ஆத்தமாட்டாத சிறுக்கி ஆணை வெல...குதுர வெல சொல்றா..நாளைக்கி மாசக்குழுக்காரன் வருவான்..அவ பணத்துக்கு அதை விக்கிறதா..இதை வக்கிறதான்னு அலை மோதுவா..அந்த நேரத்துல இந்த செண்பகம் கூலிக்காசை கண்ணுல காட்டிட்டாளோ...குளிர்விட்டுப்போயி...அவ நம்மள கொட்டாய் வாசலையே மிதிக்கவிட மாட்டாளே...அதான்.. மனக்கணக்கு போட்டு பசப்புவார்த்தை பேசி பங்குடா பணத்தை கறந்துட்டேன்.. நாளைக்கு கெடா நமக்கு தான்"நமட்டுச் சிரிப்போடு நடந்தாள் மாரி. மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து ...அஞ்சலை வீடுதேடிச் சென்றாள். அவள் நரித்தந்திரம் தப்பவில்லை.. வாசலிலேயே குழுப்பண வசூல் பையன் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தான். பிளாஸ்டிக் பூக்களில் தேன் தேடி அலையும் தேனீயாக ஓடி ஓடி ஏமாற்றத்தோடு அலைபாய்ந்த அஞ்சலை மருமகள் மாரியம்மாவைக் கண்டதும் ஓடிவந்து கைகளை பற்றிக் கொண்டாள்... மூவாயிரத்தைநூறு வரை கேட்டும் கிடைக்காத கிடா...வல்லிசாய் இரண்டாயிரத்து க்கு கைமாறியது... ஆயிரத்தைநூறு மிச்சம் பிடித்தது மட்டுமல்ல‌..பார்த்தவர்கள் எல்லாம் இம்மாம் பெரியக்கிடா ஆறாயிரம் தாராளமா பெறுமே என பெருமூச்சுவிட.. பெருமிதத்தோடு நடந்தாள் மாரி. ****************" *சுப்பண்ணே..எனக்கொரு சகாயம் செய்யனும்ணே... நீங்க..‌நம்ம பெரியப்பாப்பாவ காட்டுமன்னார்குடி யில தானே குடுத்திருக்கு...அவ இந்த மாசக் கடைசி செவ்வா வீரனார் கோவிலுக்கு கெடா வெட்டி பூசப்போடப் போறாளாம்‌‌...நல்ல கெடாவா வாங்கித்தாம்மான்னு கேட்டா..வாங்கிட்டேன்...கொண்டிச் சேர்க்கறது எப்புடின்னு.. கொழம்பிகிட்டே இருந்தேன்..ஒங்க நெனவு வந்துச்சு..அட அண்ணன் வாரம் தவறாம மீன்சுருட்டி சந்தைக்கு போவாங்களேன்னு தேடி ஓட்டியாந்தேன்.. இந்தாங்க இதுல எரநூறு ரூவா இருக்கு..நீங்களும் மருமவனும் காபி சாப்பிடுவீங்களோ.. வண்டிக்கு கச்சா ஊத்துவீங்களோ.‌. வீராணம் கரை ஏறின உடனே என் மருமவன் நிப்பாப்ல..கைமாத்தி விட்டுட்டு ...நீங்க ஆகுற சோலிய பாருங்க..என்னண்ணே.?!". "சரி..ஆகட்டும்மா...!". *********** *சனிக்கிழமை நடு இரவு .சுப்பு தனது மகனை எழுப்பி சந்தைக்கு கொண்டு போக வேண்டிய கிடாய்களை குட்டியானையில் ஏற்றி..ஒன்றுக்கொண்று துள்ளிக்குதிக்காமல் குறுக்காக கயிறு கட்டிவிட்டு பார்த்தார்...தான் வாங்கியிருக்கும் இருபது ஆடுகளில் ஒன்றிரண்டைத் தவிர எல்லாம் நொட்டை..நொள்ளைகளாகவே இருக்க..மாரி மகள் வீட்டுக்கு வாங்கிய கிடா மட்டும் மழமழவென மதர்ப்புத் தட்டி நின்றது. " என்னப்பா..வண்டிய..எடுப்பமா..இப்பவே மணி ரெண்டாகப்போகுதே..விடியறதுக்குள்ள போனாதான்..முண்டியடிச்சி மொதலத்தேத்தலாம்"என்றான் சுப்புவின் மகன். சந்தைக்குள் நுழைந்து ஆடுகளை இறக்கிய போது கவனித்த சுப்பு மகன் "என்னப்பா...மாரியத்தை மக வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கெடா இங்க இருக்கு..வேற எதையோ எறக்கிட்டியே...நல்ல மறதிக் கேசுப்பா..நீ.!" என்றான். " "டேய்...மறதியுமில்ல...மண்ணுமில்ல...நாலு மூட்டெலும்பு பெருத்த கெடா இல்லேன்னா..துண்டுக்குள்ள கைவிடுவானா அசலூரு ஏவாரி...காரியம் கெட்டுடுமோன்னு மனசு சள்ளையாதான் வந்தேன்..மாரி கெடாய் சலங்கையை அவுத்து வேற கெடாய்கு கட்டி மாத்திட்டேன்..இந்த காலத்துல சூதானமா இல்லேன்னா வாழமுடியாதுடா மகனே" என்றார் சுப்பு.


-அரும்பூர்.க.குமாரகுரு

மயிலாடுதுறை