tamilnadu epaper

யாகாவா ராயினும் நாகாக்க....

யாகாவா ராயினும் நாகாக்க....


 இனாம்காரியந்தல் என்னும் ஓர் அழகான கிராமத்தில் ஓர் அழகான பண்ணை வீடு இருந்தது. சுற்றிலும் வயல்வெளிகளாலும் மரங்களாலும் சூழப்பட்டு அழகாக இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் ஆடு,மாடு, கோழிகளை வளர்த்து வந்தார். காவலுக்காக ஒரு நாயையும் வளர்த்து வந்தார். நாய் எப்போதும் சுறுசுறுப்புடன் சுற்றி திரிந்து வயலையும் வீட்டையும் காவல் காக்கும்.

 மாலை நேரத்தில் ஆடுகள் அடைக்கப்பட்ட பட்டியை வந்து பார்வையிட்டு ஆடுகள் பத்திரமாக இருக்கிறதா என்று கண்காணிக்கும். ஆட்டு மந்தையில் கொழுத்த ஆடு ஒன்று இருந்தது.இந்த ஆட்டிற்கு நாயை கண்டாலே பிடிக்காது. எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கும்.

 ஒரு நாள் கோபத்தில் அந்த கொழுத்த ஆடு.., நாயை கண்டபடி திட்டியது. மிச்சம் மீதி தின்று வளரும் உனக்கு இவ்வளவு திமிரா.? நீ எங்களுக்கு எஜமானன் அல்ல...வெறும் காவல்காரன் தான்.அதனால்தான் நீ இருப்பதற்கு கூட இடமில்லாமல் கிடைத்த இடத்தில் எல்லாம் படுத்து கொள்கிறாய். நாங்கள் அப்படி அல்ல... எங்களுக்கென்று முதலாளி 'பட்டி 'கட்டி கொடுத்துள்ளார். அதனால் நீ சற்று தள்ளியே இரு.. எங்களை கண்காணிக்கும் அளவுக்கு எல்லாம் உனக்கு தகுதி இல்லை.... என்று சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தது.

 மற்ற ஆடுகள் எவ்வளவோ தடுத்தும்... கொழுத்த ஆடு அவற்றை காதில் வாங்காமல் நாயை பகைத்துக் கொண்டது.

 ஆனால் நாய் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் எஜமான் வளர்க்கும் இவைகளையும் தன் நண்பர்களாகவே எண்ணியது. எப்பொழுதும் போல் வயல்வெளிகளையும் மாட்டுத் தொழுவத்தையும் ஆட்டுப் பட்டியையும் கண்காணித்துக் கொண்டு வந்தது. ஆனால் கொழுத்த ஆடு தினமும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தது.சண்டை தொடரவே நாய் சற்று விலகிக் கொண்டது.ஆடுகள் இருக்கும் பட்டி பக்கம் செல்வதை தவிர்த்தது.

 இதை பல நாட்களாக கவனித்துக் கொண்டு வந்த திருடர்கள்....

 ஒருநாள் இரவு ஆடுகளை திருட முயற்சி செய்தார்கள்.அந்த நேரத்தில் ஆடுகளின் சத்தம் கேட்டு ஓடி வந்த நாய்...திருடர்களுடன் போராடி திருடர்களை கடித்து விரட்டியது. பின்பு ஆடுகளை பார்த்து... "உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே..! அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்களா...?" என அக்கறையாய் கேட்டது.

 கொழுத்த சண்டை ஆடு மிகவும் வெட்கி தலைகுனிந்து.... என்னை மன்னித்துவிடு. நான் உன்னை எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருந்தேன் ஆனால் எங்களுக்கு ஓர் ஆபத்து என்றதும் நீதான் ஓடி வந்து எங்களை காப்பாற்றினாய். நீ மட்டும் இப்போது வராமல் இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இனி இது போல் தவறு செய்யமாட்டேன்.. என்னை மன்னித்துவிடு....என்று கூறி அழுதது.

 அங்கிருந்த பெரிய ஆடு.... அதற்குத் தான், நாம் எப்போதும் நம்முடைய "நா" காக்க வேண்டும். பிறரை நாம் எப்பொழுதும் குறைத்து மதிப்பிட கூடாது. நீ "நா" காக்காததால்...நாய் நம் பட்டி பக்கம் வருவதை நிறுத்தியது. அதனால் தான் திருடர்கள் நம்மை தாக்கினார்கள்.நாம் எதை காக்கிறோமோ... இல்லையோ நாவையாவது காக்க வேண்டும். இல்லையேல், அதுவே நம் துன்பத்திற்கு காரணமாய் அமையும் என்று அறிவுரை கூறியது. இனி நாம் நண்பர்களாக இருப்போம் என்று கூறி மகிழ்ந்தது.


 திருக்குறள் :


யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்


 சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.



 முனைவர் உமாதேவி பலராமன்,

 117 பைபாஸ் சாலை,

 திருவண்ணாமலை. 606601.

9486365350.