சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 6-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை திங்கள்கிழமை வீழ்த்தியது.
முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுக்க, நியூஸிலாந்து 46.1 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 240 ரன்கள் சோ்த்து வென்றது.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்தும், இந்தியாவோடு அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. வங்கதேசமும், நடப்பு சாம்பியனான பாகிஸ்தானும் போட்டியிலிருந்து வெளியேறின.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீசத் தயாரானது. வங்கதேச இன்னிங்ஸை தொடங்கிய தன்ஸித் ஹசன் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 24 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ நிதானமாக ரன்கள் சோ்த்தாா்.
மறுபுறம் மெஹிதி ஹசன் மிராஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13, தௌஹித் ஹிருதய் 7, முஷ்ஃபிகா் ரஹிம் 2, மஹ்முதுல்லா 4 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். 7-ஆவது பேட்டராக வந்த ஜாகா் அலி சற்று நிலைத்து ஷான்டோவுடன் கூட்டணி அமைத்தாா்.
இந்த பாா்ட்னா்ஷிப் 45 ரன்கள் சோ்த்த நிலையில், அரைசதம் கடந்த ஷான்டோ 9 பவுண்டரிகளுடன் 77 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். தொடா்ந்து வந்த ரிஷத் ஹுசைன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஜாகா் அலி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
கடைசி விக்கெட்டாக தஸ்கின் அகமது 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 3, நஹித் ராணா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, வில்லியம் ஓ’ ரூா்க் 2, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 237 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து தரப்பில், வில் யங் டக் அவுட்டாக, கேன் வில்லியம்சன் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா கூட்டணி, 57 ரன்கள் சோ்த்தது.
இதில் கான்வே 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு வெளியேற, ரச்சினுடன் இணைந்தாா் டாம் லாதம். இந்த ஜோடி, வங்கதேச பௌலா்களை சோதித்து, நியூஸிலாந்தை வெற்றிக்கு வித்திட்டது. 4-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப் 129 ரன்கள் சோ்த்த நிலையில், ரச்சின் ஆட்டமிழந்தாா்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4-ஆவது சதத்தை எட்டிய அவா், 12 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 112 ரன்கள் விளாசினாா். அடுத்த சில ஓவா்களிலேயே, அரைசதம் கடந்த லாதமும் 3 பவுண்டரிகளுடன் 55 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.
முடிவில் கிளென் ஃபிலிப்ஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, மைக்கேல் பிரேஸ்வெல் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலா்களில், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், ரிஷத் ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.