வர்ணம்
என்னங்க வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க ஆள் வராங்கன்னு சொன்னீங்க நாளைக்கு வராங்களா?
ஆமா, நாளைக்கு வந்துருவாங்க உனக்கு ஒரு வேளையும் இல்ல, அவங்களே வந்து எடுத்து வச்சு கிளீன் பண்ணிட்டு பெயிண்ட் அடிச்சு கொடுத்துடுவாங்க, ஏன் கேக்குற
இல்லைங்க , என் ஃப்ரெண்ட் வீட்டுல பெயிண்ட் அடிக்க வந்தவங்க யாரோ நகையை திருடிட்டு போயிட்டாங்க அதனால நகை, பணம் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா பேங்குல்ல வச்சிட்டு வந்துடலாமா ,
அதபத்தி நீ கவலைப் படாத நான் பாத்துக்குறேன்
மறுநாள் காலை ராமு பீரோவில் இருந்து போடாத டி. ஷர்ட் , ஷார்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் .எதுக்கு இதெல்லாம் எடுத்து ஒதுங்க வச்சிட்டு இருக்கீங்க?சாப்பிட வாங்க,
அவங்க எல்லாம் வரதுக்குள்ள என் வேலையை முடிக்கணும்.
ஏன் ? பதட்டமாக இருக்க இரு வரேன்.
சற்று நேரத்தில் பெயிண்டரும், மற்றும் நான்கு பேரும் உடன் வந்தார்கள். எல்லாரும் சாப்டீங்களா? வாங்க வீட்ல எந்த இடத்துல கொத்தி பூசணும் , பட்டி பாக்கணும் ஃபுல்லா எந்தெந்த இடத்துல என்ன வேலை இருக்கு எல்லாம் உங்களுக்கு தெளிவா சொல்றேன் . என் கம்பெனியில் வேலை நிறைய இருக்கு நான் பிஸியா இருப்பேன். உங்கள நம்பி தான் விட்டுட்டு போறேன்,செய்யற வேலை சுத்தமா இருக்கணும்.
பெயிண்ட் அடிக்கும் போது தேவைப்படும் இந்த டி.சர்ட், ஷாட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் வேணும்கிறவங்க எடுத்து போட்டுக்கோங்க ,வேலை முடிஞ்சதும் புதுசு எடுத்து தரேன்.
மாடியில் இருந்து வேலை ஆரம்பிச்சுடுங்க 11 மணிக்கும், மாலை நாலு மணிக்கு டீயும் வடையும் சொல்லி இருக்கேன் கொண்டு வந்துருவாரு,
நான் பணம் கொடுத்துடறேன். ஐந்து பேரும் மாடியை நோக்கி உற்சாகமாக சென்றனர்.
ஏங்க நம்ம என்ன புது வீடு கட்டியா பால் காய்ச்சறோம். புது டிரஸ் எல்லாம் எடுத்து கொடுக்கிறேன் சொல்லிட்டு இருக்கீங்க ,
அது இல்ல வசந்தி , நாம அவங்கள மனசுனா மதிச்சாதான் வேலை செய்யறதுக்கு ஆர்வம் இருக்கும்.எல்லாரும் கெட்டவங்களும் இல்ல திருடுறவங்களும் இல்ல அவங்க குடும்பத்த காப்பாத்த தானே வேலைக்கு வராங்க,வேலைக்கு வர்றவங்கள அடிமையா நடத்தக்கூடாது, முடிஞ்ச வரைக்கும் அவங்களோட தேவையை நம்ம பூர்த்தி செய்துவிட்டால் அவங்க ஏன் தப்பான வழிக்கு போக போறாங்க,
சுவற்றுக்கு வர்ணம் பூசுற மாதிரி , அடிக்கடி தூசியும் அழுக்கையும் சுத்தம் பண்ணி அதுபோல மனசையும் சுத்தமா வச்சுக்கணும்.
ராமு சொல்ல, சொல்ல அவன் நிறுவனம் சிறப்பாக இருப்பதின் காரணம் வசந்திக்கு புரிந்தது.
சங்கரி முத்தரசு ,
கோவை .