சீதாராம் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். அதிக வட்டிக்கு பணம் கொடுத்து அதைக் கொடுக்க முடியாமல் கடன் வாங்கியவர் திண்டாடும் போது அடித்துப் பிடித்து அவரிடம் இருக்கும் சொத்துக்கள் எல்லாவற்றையும் பிடுங்கி விடுவார். புறம்போக்கு இடம் எது வந்தாலும் பட்டா, பத்திரம் எல்லாம் பக்காவாக ரெடி பண்ணி வளைத்துப்போட்டுவிடுவார்.
இவருடைய கணக்கில்லா சொத்துக்கு அறிவு என்னும் ஒரே பையன் தான். பெயர்தான் அறிவே தவிர பொது அறிவு இல்லாத ஆனால்
மற்ற விபரங்கள் எல்லாம் தெரிந்தவன்.
பெரும்பாலும் வெளிப் பழக்கம் இல்லாமல் முப்பது வயது வரை மது, மாது என அனைத்து பழக்கமும் வீடு தேடி வந்து விடுவதால் எந்தக் கவலையுமின்றி சுகபோகமாக நாட்களைக் கழித்தான்.
ஆனால் சீதாராம் அப்படியல்ல. ஊரை ஏமாற்றி சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் நம்மை யாரும் ஏமாற்றி விடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்.
ஒருநாள் சீதாராமுக்கு மேலிடத்தில் தெரிந்த ஒருவர் மூலம் வருமானத்துறை அதிகாரிகள் ரெய்டு வரலாம் என்கிற தகவல் வந்தது
அதைக் கேட்டதிலிருந்து சீதாராம் வெலவெலத்துப் போனார். பிறகு சுதாரித்துக் கொண்டு
டாக்குமென்ட்ஸ், கணக்கில் வராத நகைகள், சொத்துக்கள் அனைத்தையும் தன் மகன் அறிவு வை அழைத்து,
" தம்பி! இதுவரை நான் உன்னை எந்த வேலையும் சொன்னதில்லை! இப்போது முதன்முறையாக உன்னை நம்பி மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைக்கிறேன்! ஏன் என்றால் நான் யாரையும் நம்ப மாட்டேன். வேறு யாரிடமாவது இதை ஒப்படைத்தால் என்னை ஏமாற்றி விடுவர். அதனால் நீ, நான் சொல்கிறபடி மட்டும் செய்! அது போதும்!"
என்றவர்
"அறிவு! நான் உன்னிடம் ஒரு பெட்டி தருகிறேன். அதை நான் சொல்லும் ஒரு லாட்ஜுக்கு சென்று
அங்கே ஒருவர் உனக்காகக் காத்திருப்பார். அவரிடம்
இந்தப் பெட்டியைக் கொடுத்து விட்டு அவர் ஒரு பெட்டி தருவார் அதில் பணம் இருக்கும். அது எவ்வளவு என்பதையும், அவர் பெயர், செல்போன் எண் மற்றும் அடையாளங்களை உன் மொபைலுக்கு அனுப்பியுள்ளேன். நீ, உன்னுடைய மொபைல் எண் மற்ற விபரங்களை அவருக்கு அனுப்பிவைத்திருக்கிறேன். நீ மொபைலைப் பார்த்துக்கொள்!
பணத்தை லாட்ஜிலேயே வைத்து பணக்ககட்டுகளை சரிபார்த்து விடு! அதன்பிறகு ஒரு நிமிடம் கூட நீ அந்த இடத்தில் இருக்கக் கூடாது. அவரும் கிளம்பிவிடுவார்! அந்தப் பணத்தையும் நான் தரும் சில டாக்குமென்ட்ஸ் ஸையும் புயல் வேகத்தில் எடுத்துக் கொண்டு நமது கிராமத்திற்கு சென்று விடு! எனக்கு இங்கே சில வேலைகள் பாக்கி இருக்கிறது அதை முடித்துவிட்டு நானே உன்னைப் பார்க்க வருவேன். அதுவரை நீ வெளியே வரக்கூடாது!"
என்று தன்னுடைய மாஸ்டர் பிளான் முழுவதையும் கேட்டு விட்டு விபரீதம் புரியாமல் கேஷூவலாகச் செல்லும் தன் மகனைக் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தார் சீதாராம்.
அவன் பெட்டியில் கொண்டு செல்வது அத்தனையும் வைரம் என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டால் பதட்டத்தில் எங்கேயாவது உளறிக்கொட்டிவிடுவான் என்கிற பயத்தில் அதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார் சீதாராம் எச்சரிக்கையாக
இது நடந்த ஒரு மணி நேரத்திற்குள் வருமானவரி அதிகாரிகள் திடீரென
ரெய்டு க்கு வந்திருப்பதாகக் கூறி அடையாள அட்டையைக் காட்டி மளமளவென சோதனை நடத்தினர்.
நடந்த சோதனையிலும்,
சீதாராமிடம் துருவி, துருவி விசாரித்ததிலும்
ஒன்றும் சிக்கவில்லை அதிகாரிகளுக்கு!
இதுபோக அவரின் கெஸ்ட் ஹவுஸ், மற்ற பங்களாவில் நடந்த சோதனையிலும் எதுவுமே உருப்படியாக தேறவில்லை!
எதுவும் பேசாமல் கண்களை மூடித் தியானத்தில் இருந்தார் சீதாராம்.
இறை விழும் என ரூமர் கிடைத்து வந்த அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்ட சீதாராம் உடனடியாக மகனுக்கு போன் பண்ணலாமா என யோசித்தவர் இப்போது வேண்டாம் என்று மகனைப் பார்க்க தொலைவில் உள்ள தன் கிராமத்துக்கு விரைந்தார்!
அப்பாவைப் பார்த்ததும், "என்னப்பா! ஏதும் பிரச்சினை இல்லையே!"
என்றான்.
"அதெல்லாம் நான் சமாளிச்சுட்டேன்! நீ போன காரியம் என்னாச்சு?" என ஆர்வமும், பதட்டமுமாகக் கேட்டார் சீதாராம்.
" பயப்படாதீங்க அப்பா! நான் உங்க பிள்ளையாச்சே!" என்ற மகனைக் கட்டித்தழுவியபடி அவசர அவசரமாக வீட்டிற்குள் சென்று பெட்டியைத் திறந்த சீதாராம் பார்த்த உடனேயே அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
"என்னப்பா! அதிர்ச்சியாகி நிக்கிறீங்க? எல்லாமே புது இரண்டாயிரம் நோட்டு கரன்சிகள் ப்பா!"
என்றவனை ஓங்கி ஒரு அறை விட்டு,
"அட! அறிவுகெட்டவனே! அவன் உன்னை நல்லா ஏமாத்திட்டான்டா! உள்ள இருக்கிறது அத்தனையும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுடா! பாவி!
இதை நம்ம கவர்மென்ட்
நிறுத்தியே வருஷக்கணக்காகுதேடா
ஐயோ! இது கூடவா உனக்குத் தெரியாது?
உன்னிடம் நான் கொடுத்தது அத்தனையும் ஒரிஜினல் டைமண்ட்ஸ்! அது மதிப்பு
தெரியுமா உனக்கு?
ஒன்றா இரண்டா?
ஐநூறு கோடியாச்சே!
எல்லாமே போச்சே! "
என்று தலையில் அடித்துக் கொண்டு ஆவேசமாக பாய்ந்தார் மகன் மீது!
ஆக! வல்லவனுக்கு வல்லவன் இருக்கத்தான் செய்கிறான்.
பிரபாகர்சுப்பையா, மதுரை-12.