tamilnadu epaper

வலி

வலி

 

 " அடங்காத சத்தம் ஓயாத அழுகை நிற்கவில்லை ,

 கமலாவின் கணவன் மணிமாறன் ஐம்பது வயதில் உடல் நலம் குன்றி இறந்ததும் புரண்டுப் புரண்டு கண்ணீர் விட்டு அழுது முகம் வீங்கி வீட்டில் முடங்கினாள் கமலா .

 

   பத்து நாட்கள் கடந்தது அன்று மங்களமும் குங்குமமும் தாலியும் கமலாவை விட்டு விலகி வேறு இடம் தேடி குடி புகுந்து கொண்டது .

 

   விதவை என்கிற

புது பெயரும் உரிமை

இழப்பும் பறிப்பும்

 கமலாவை கவ்விக் கொண்டது . இன்று இன்னும் பலமாக அழுது விசும்ப அலறல் சத்தம் கேட்டு மெதுவாக படியேறி வந்தாள் ராகவி .

 

     கமலா வீட்டிற்கு அடுத்த வீடு ராகவி வயது முப்பது கணவன் விபத்தில் இழந்து பத்து ஆண்டு ஆகிறது, கைக் குழந்தையோடு அன்று நின்ற அவள் மெல்ல மெல்ல பள்ளிப் படிப்பை முடிக்க இருக்கும் மகனாக வளர்த்துவிட்டாள் . அவளின் நிலை பரிதாபம் தான் இருந்தும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் ராகவி .

 

    " மெல்ல படியேறி வந்தவள் கமலாவை வெளியில் அழைத்து வாசலில் இருந்த காலி நாற்காலி , சாமியானா அனைத்தையும் காட்ட அன்று நிரம்பி உட்கார இடம் இல்லாமல் வழிந்தது .

பத்து நாள் கடந்ததும் உட்கார ஆள் இல்லை தனி மரமாய் அனைத்தும் கிடக்கிறது இது தான் உண்மை என்றாள். நிதி நீர் ஒரு இடத்தில் தேங்குவதில்லை கடலை நோக்கி ஓடும் , நீயும் கவலை, இழப்பு, இதை மறந்து வாழ பழகிக்கொள் என்றாள் .."

 

   கோழை போல அழுவதை நிறுத்தி விட்டு அடுத்து உன் பெண்ணுக்கு தாயாக வழி காட்டியாக , உன் குடும்ப பொறுப்பை ஆண் மகன் போல் ஏற்று நடத்திட மனதை பாறை கல் போல் ஆக்கிவிட்டு நாளைய விடியலை எதிர் கொள்ள தயார் ஆகு , போனது வராது , வராத ஒன்றுக்கு ஒப்பாரி வைத்து அடங்கி முடங்காதே என்றாள் ராகவி .

 

  உன் கணவன் சொத்து எதுவும் வைக்கவில்லை உட்கார்ந்து சாப்பிட , உன் மகளுக்கும் உன் வயிற்றுக்கும் ஆறுதல் சொல்ல கண்ணீரை துடைத்து விட்டு உழைக்க தயாராகு என்று தைரிய வார்த்தைகள் கூறி கமலாவை சகஜ நிலைக்கு கொண்டு வந்தாள் ராகவி .

 

    ஊரார் பாரதி கண்ட புதுமைப் பெண் போல கம்பிரமாய் பார்க்க வீர நடை போட்டு தன் வீட்டுக்குள் புகுந்து தாள் இட்டாள் ராகவி .

 

   " உள் அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டு சத்தம் வராமல் கதறி அழுது கண்ணீர் நதியாய் ஓட மனதால் நினைத்தாள் கணவனை இழந்த வேதனை எத்தனை கொடுமை அதை பத்து ஆண்டுகளாய் அனுபவிக்கும் அவலம் எப்படி பட்டது என்பதை எப்படி கமலாவிடம் சொல்வேன் என்று மனம் உடைந்து தரையில் சரிந்தாள் ராகவி ... "

 

- சீர்காழி. ஆர். சீதாராமன் .

- 9842371679 .