" குல தெய்வத்துக்கு படையல் போட்டு வருஷ கணக்கா ஆவுது... மனசுக்கு அது ஒரு குறையாவே இருக்கு ...இந்த வருஷம்
வர்ற பங்குனி மாசம் படையல் போட்டுடுவோம்ண்ணா... அப்படியே பேரனுக்கு மொட்டை அடிச்சி காதும் குத்திட்டுவோம் ..." கிராமத்திலிருக்கும் அண்ணனிடம் தம்பி போனில் ஆலோசனை
கேட்க ,
" நானும் இதபத்தி உன் கிட்ட கலக்கணுன்னுதான் இருந்தேன் நீயே கேட்டுட்ட... எப்படியும் சொந்த பந்தம் பங்காளிங்க நெருங்கிய நண்பர்கள்
அக்கம் பக்கம்ன்னு கணக்கு போட்டாலே கொறஞ்சது நூத்தி ஐம்பது பேருக்கு வந்துடும்...அது இல்லாம கெடா வெட்டி
கறி சோறு போடுறோம்னாலே கோவிலுக்கு பக்கத்துல உள்ள எழபாழங்க ஐம்பது பேர்கிட்ட வந்துடுவாங்க... அவங்களுக்கு போடறது புண்ணியம்தானே...ஆகமொத்தம்
இருநூறு பேரு... அதுல இருபத்தி ஐந்து
பேரு கறி சாப்பிடாதவங்க இருந்தா கூட
அப்படி இப்படின்னு நூத்தி எழுபத்தைந்து
பேருக்கு கறி சோறு போட்டாவணும்... நாலு
கெடா தேவபடும்..."அண்ணன் விவரமாக எடுத்துசொல்ல,
"செலவ பத்தி யோசிக்க வேணாண்ணே...
படையல சிறப்பா போட்டுடுவோம்...நல்ல நாள் மட்டும் பாத்துச்சொல்லுங்க... ஆக வேண்டிய வேலைய பாக்க ரெண்டு நாளைக்கு முன் கூட்டியே ஊருக்கு வந்துடுறோம்..." தம்பி சொல்லிவிட்டு போனை துண்டித்தார்.
சொன்னது போல் படையலுக்கான
நாளும் நெருங்கிவிட்டது.இரண்டு
நாட்களுக்கு முன் கூட்டியே தம்பி குடும்பத்துடன் ஊருக்கு வந்துவிட்டார்.
படையலுக்கான எல்லா வேலைகளையும் ஏற்கெனவேஅண்ணனே ஏற்பாடு செய்து விட்டார்.
முதல் நாள் அண்ணனும் தம்பியும் சேர்ந்து பங்காளி சொந்தபந்தத்திற்கு படையலுக்கு சொல்லிவிட்டு வந்தனர்.
மறு நாள் குலதெய்வ கோவிலில் சிறப்பாக
மொட்டை அடித்து காதுகுத்தி பூஜை முடிந்து கேடாவெட்டும் முடிந்து விட்டது.அடுத்து
கறி விருந்துக்காக அனைவரும் காத்திருந்தனர்.
"நம்ம சொந்த பந்தங்கள விட அக்கம் பக்கமுள்ள ஏழபாழங்க கூட்டம்தான்
அதிகமா இருக்கும் போலிருக்கு...யாருக்கும்
இல்லன்னு சொல்லாம கறிசோறு போடுவோம்...நம்மளுக்கு புண்ணியம் கிடைக்கும்..." பங்காளி ஒருவர் சொல்ல,
" வள்ளலார் பிறந்த மண்ணுல உயிர்
பலி கொடுத்து பாவத்த சம்பாதிச்சி நம்ம குலம் தழைக்கணும்ன்னு சாமிக்கிட்ட வேண்டுறதும்... கறிசோறு போட்டு ஏழைங்ககிட்ட புண்ணியம் தேடுறதும்
எந்த விதத்ததுல நியாயம் ன்னு எனக்கு படல..." உறவுக்காரர் ஒருவர் சொல்ல
கூடியிருந்த சொந்தபந்தமெல்லாம்
யோசிக்க ஆரம்பித்தனர்.
சுகபாலா,
திருச்சி.