எப்போதுமே தமிழ்நாடு இ.பேப்பரில் சிறுகதைகள் படிப்பது ஒரு தனி சுவாரஷ்யம்! இரண்டு கதைகள் வெளியிட்டாலும், அந்த இரண்டு கதைகளுமே இரண்டு வேறு வேறு விதத்தில் மனதை கவருகிறது!
முகில் தினகரனின் 'தட் ஈஸ்....கலைச்செல்வி' என்ற சிறுகதையை படித்து பரசுராம் நிலையை அறிந்து, ஆடிப்போய்விட்டேன்! நானாக இருந்தால், 'இந்த வேலையே வேண்டாம்டா சாமி' யென்று ஓடியிருப்பேன். இனி இந்த கலைச்செல்வி ஜி.எம்.மிடம் சிக்கிக்கொண்டு இந்த பரசுராம் என்ன பாடுபடப்போகிறானோ! ஒரு காலத்தில் பரசுராமைப் பார்த்து பயந்து நடுங்கிய கலைச்செல்வியிடம் இனி பரசுராம் தினந்தோறும் பயந்து நடுங்கப்போகிறான். இதுதான் யானைக்கு ஒரு காலம் வருமென்றால் பூனைக்கும் ஒரு காலம் வருமென்பது!
மன்னச்சநல்லூர் பாலசந்தரின் 'நான் பார்த்த...' என்ற சிறுகதை நன்றாக இருந்தது. சில சமயம் இப்படிதான் நாம் எதிர்பாராத நல்ல நிகழ்ச்சி சஸ்பெண்ஸாக நடக்கும்! இதற்கெல்லாம் நம் நேரம் நன்றாக இருக்கவேண்டும்!
இந்த எகிப்து, நைல்நதி, பிரமிடெல்லாம் நான் பள்ளிக்கூடத்தில் சரித்திர புத்தகத்தில் படித்தது. பிற்காலத்தில் டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சி சேனல்களில் பார்த்து மகிழ்ந்தது. பயணங்கள் முடிவதில்லை பகுதியில் மல்லிகா கோபாலின் 'எகிப்திய பயணம்' கட்டுரையை படிக்கும்போது, எகிப்து நாட்டை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்ததைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் எகிப்திற்கு செல்லவேண்டுமென்ற எனது ஆசைக்கனவு நிறைவேறுமென்று நம்புகிறேன்.
அரவக்குறிச்சிப்பட்டி அசோக்ராஜாவின் 'முருகனை ஆண்டிக் கோலத்தில் எப்போதெல்லாம் தரிசிக்கலாம்' என்ற ஆன்மிக கட்டுரை சிறப்பாக இருந்தது. இன்னொரு ஆச்சரியமான விஷயம் இந்த கட்டுரையை எழுதிய எழுத்தாளர் எம்.அசோக்ராஜா என் நெருங்கிய நண்பர். நான் திருச்சியிலிருந்த 1979-ம் வருடத்திலிருந்து இன்றுவரை நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் பட்டுராசு வரலாறு யாரென்று பார்த்தபோது, அவர் கவிஞர் 'தமிழ்ஒளி'தான் என்பதை அறிந்தபோது, ஆச்சரியத்துடன் படித்தேன். இவரது கவிதைகளை படித்திருக்கிறேன். ஆனால் இவரைப் பற்றி இப்போதுதான் முழுமையாக அறிகிறேன். ஆனாலும் இவர் 41-வது வயதிலேயே காலமானார் என்ற செய்தி வருத்தத்தை தந்தது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய விஷயங்களை தருவதில் தமிழ்நாடு இ. பேப்பர் தன்னிகரற்ற தனிச் சிறப்புடன் விளங்குகிறது!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.