tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-13.04.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-13.04.25


  சமையல்காரர் தனது மகனும் தன்னைப்போல சமையல்காரராக வந்து கஷ்டப்படக் கூடாது என்று நினைத்து மகனை நன்றாக படிக்க வைக்கிறார். அவனோ இன்ஜினியருக்கு படிக்கமாட்டேன், கேட்டரிங் டெக்னாலஜி படிக்கிறேன் என்கிறான். எதையும் காலத்திற்கு தகுந்தபடி நவீனமாக செய்தால் மேன்மேலும் வாழ்க்கையில் உயரலாம் என்பதை மண்ணச்சநல்லூர் பாலசந்தரின் 'வாரிசு' என்ற சிறுகதை சிறப்பாக உணர்த்தி சிந்திக்க வைத்துவிட்டது.


  தாத்தாவின் புத்தக ஆசை அவர் மறைந்த பிறகாவது அவரது பேரன் பேத்திகளுக்கு ஏற்பட்டது மகிழ்ச்சியை தந்தது. புத்தகத்தின் மீது நாம் வைக்கும் காதலே உண்மைக்காதல் என்பதை உணர்த்திய நா.பத்மாவதியின் சிறுகதை பாராட்டுக்குரியது.


  கவி.வெண்ணிலவனின் 'காதலின் பொன்வீதியில்...' தொடர்கதையில் தனது மாமா குருமூர்த்தியின் எதிரிகளின் திட்டங்களை அறிய, மாதவன் குடித்தது போல நடித்து உளருவது வேடிக்கையாக இருக்கிறது. அடுத்து என்ன செய்யப்போகிறான் நாகராஜன்,அதற்கு மாதவன் பதிலுக்கு என்ன செய்யப்போகிறான் என்பதையெல்லாம் அறிய ஆவலாக இருக்கிறேன்.


  ச.கிறிஸ்துவ ஞான வள்ளுவனின் 'குருத்தோலை கற்றுத் தரும் பாடம்...!' என்ற கட்டுரை மிகச்சிறப்பு. பனங் குருத்தோலையின் இரு இதழ்களும் நன்கு ஒட்டியிருக்கும். அது போல நாமும் இறைவனுடன் இணைந்து வாழ வேண்டும். உலகத்தவரோடும் இணைந்து வாழ வேண்டும்' என்பது போல பனங்குருத்தோலையைக் கொண்டே பல பாடங்களை அவர் விளக்கியிருந்தவிதம் நல்ல சிந்தனைக்கு விருந்தாக இருந்தது.


  மகிகவி பாரதியாரின் படத்தை வரைந்தவர், வெள்ளையர்களின் ஆட்சியின்போதே, கோட்டைக்குள் இருந்த 140 அடி உயரமுள்ள கம்பத்தில் ஏறி பிரித்தானியரின் கொடியை இரவோடு இரவாக இறக்கிவிட்டு, இந்திய தேசியக்கொடியை ஏற்றி பறக்கவிட்டவர் என்றெல்லாம் படித்திருக்கிறேன். ஆனாலும் இந்திய சுதந்திரத்திற்காக அவர் செய்த முழு வீரதீர சாகச செயல்களையெல்லாம் தமிழ்நாடு இ.பேப்பர் மூலம்தான் அறிந்து வியந்தேன்.


  நீடுர் அ.முஹமது நிஜாமுத்தீனின் 'சோங்க்ரான்' என்ற தாய்லாந்து நாட்டின் புத்தாண்டு விழாவை பற்றிய கட்டுரை நான் அறியாத பல தகவல்களை தந்தது. இந்த தாய்லாந்து புத்தாண்டு விழாவின்போது துறவிகள் மற்றும் முதியவர்களையும் குளிப்பாட்டுவது வழக்கம். இப்போது இந்த விழாவை ஒருவருக்கொருவர் மீது தண்ணீரை ஊற்றி விளையாடுவதற்கான ஒரு குதூகல விழாவாக கொண்டாடுகிறார்கள்.


  தமிழ்நாடு இ.பேப்பர் மூலம், உலகெங்கும் நடக்கும் புதிய புதிய நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் தெரிந்துக்கொள்ள முடிவது மகிழ்ச்சியை தருகிறது!



-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.