tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-14.04.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-14.04.25


  அரவிந்தனின் 'வாழ்வை சீராக்கும் - சித்திரை!', 'விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்', ' சிவ.முத்து லட்சுமணனின் சித்திரை மாத வழிபாடுகள்...!' ஆகிய கட்டுரைகள் தமிழ்நாடு இ.பேப்பரை சித்திரை சிறப்பிதழாக மாற்றி மனதை குதூகலத்தில் ஆழ்த்தியது. சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இந்திரவிழா, சித்திரா பவுர்ணமி அன்று நடந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'சித்திரா' என்னும் சொல் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் குறிக்கும். ராசி மண்டலத்தில், முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது சித்திரை முதல் நாளாகும். அதனால்தான் சீத்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடடுகிறோம். தமிழ் வருடப் பிறப்பு அன்று வேப்பம் பூக்களைச் சேகரித்து, புளி, வெல்லம் சேர்த்து பச்சடி செய்வது வழக்கம். இனிப்பும், புளிப்பும், கசப்பும் கலந்த இந்தப் பச்சடி, வாழ்வே இனிப்பும், கசப்பும், புளிப்பும் கலந்ததுதான் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது போன்ற சித்திரை தகவல்கள் சுவையாக இருந்தது.


  பாபா சஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளன்று அவரைப்பற்றிய சிறப்பான கட்டுரையை வெளியிட்ட தமிழ்நாடு இ.பேப்பருக்கு பாராட்டுகள். ஒரு அரைப்பக்க கட்டுரையிலேயே அவரின் முழுமையான வாழ்க்கையை, அவரது சிறப்பை சொல்லியிருந்த விதம் மனதில் அவரைப்பற்றிய நினைவுகளுடன் நிற்கிறது.


  தமிழ்நிலாவின் 'அன்புச் சட்டையில் சிதறிய பொத்தான்கள்', பானுமதியின் 'சித்திரம் பேசுதடி' இரண்டு சிறுகதைகளும் சமூகக் கதையாக பாசம், நமது வாழ்க்கை முறை, மனிதர்களின் பல்வேறு எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் சிறப்பாக இருந்தது.


  பல்சுவை களஞ்சியம் பகுதியில் 'ஒரு விவசாயின் ஏக்கம்!', 'சோம்பேறித்தனம்' இரண்டும் நல்ல கருத்துள்ள கதைகளாக இருந்தது. 'விவசாயிகளின் பிரச்சனைகளை விவசாயிகளே பார்த்து கொள்ளட்டும் என்று இல்லாமல் நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு விவசாயிகளுக்கு உதவிகளை செய்வோம்.' 'சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது உடல் ஆரோக்கியம். உடல் ஆரோக்கியத்திற்கு தடையாக இருப்பது சோம்பேறித்தனம்',. என்ற இந்த இரண்டு கருத்துகளும் அனைவரும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய நல்ல கருத்தாகும்.


-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.