tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-20.04.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-20.04.25


  பால்ய சிநேகிதன் வீட்டு திருமணத்திற்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கும் திருமணத்திற்கும் இரண்டு வேளையும் தவறாமல் சென்றும், அங்கே ஒருவேளையும் சாப்பிடாமல் வந்ததற்கும் ப்ரசண்டேஷன் கொடுக்காமல், மொய் கவர் மட்டும் கொடுத்து வந்ததற்கும் இப்படி ஒரு காரணம் இருக்கிறதாயென்று ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் 'ஏன் வேண்டாம்?' என்ற மு.மதிவாணனின் இந்த சிறுகதை சிறப்பாகதான் இருக்கிறது.


  ராமநாதன், சோதிடர் கணேசனுக்கு சொன்ன அறிவுரை சரியானதுதான். எதற்கெடுத்தாலும் முன்னோர்கள் செய்த பாவமென்றால் அது முன்னோர்களையும் அவமரியாதை செய்வது போலவாகும். அதோடு சோதிடம் கேட்டு செல்வோர்கள் வீட்டிலேயும் பிரச்சனைகள் வரும். நன்னிலம் இளங்கோவனின் 'பாவச்செயல்' சிறுகதை ராமநாதனால் நல்லவிதமாக மாறியது மகிழ்ச்சியை அளிக்கிறது.


  கவி. வெண்ணிலவனின் 'காதலின் பொன்வீதியில்...' தொடர்கதையில் சதி திட்டங்கள் ஆரம்பமாகி விட்டது. ருத்திரமூர்த்திக்கு எதிராக நாகராஜனும், மாதவனும் சந்தோஷை வைத்துக்கொண்டு செய்ய நினைக்கும் தீங்கான காரியங்களெல்லாம் எப்படியெல்லாம் சொதப்ப போகிறது என்று அறிய ஆவல் ஏற்படுகிறது. போதாதற்கு இப்போது இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வேறு வந்து விட்டார். இந்த தொடர்கதை இப்போது எக்ஸ்பிரஸ் போல வேகம் எடுத்துவிட்டது!


  ஈஸ்டர் பண்டிகையென்று கேள்விப்பட்டிருந்தேனே தவிர அந்தப் பண்டிகையை பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தேன். இப்போது தே.ராஜா சிங் ஜெயக்குமாரின் கட்டுரையை படித்தபிறகுதான் ஈஸ்டர் பண்டிகையை பற்றி தெளிவாக தெரிந்துக்கொண்டேன். ' 'இயேசு உயிர்த்தெழுதலை நம்பியவர்கள் கிறிஸ்தவர்கள் எனப்படுகிறார்கள். நம்பாதவர்கள் இன்னும் யூதராக தொடர்கிறார்கள். இந்த உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் பண்டிகையாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது' என்று இந்த கட்டுரையில் நிறைய தகவல்கள் தெளிவாக சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடதக்க ஒன்றாகும்.


  தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் பி.எஸ். இராமையாவை பற்றிய கட்டுரை பிரமிக்க வைத்தது. நான்காம் வகுப்பே படித்த ஒருவர் என்ன என்னவோ பணிகளையெல்லாம் செய்து, பிறகு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்று, அதன்பிறகு எழுத்தாளராகி, பத்திரிகையாளராகி, பிறகு சினிமாவுக்கும் சென்று சாதனை புரிந்திருப்பது அசர வைக்கிறது. ஒரு காலத்தில் ஆனந்தவிகடன், தினமணி கதிர், குமுதம் பத்திரிகையில் வாரா வாரம் தொடர்ந்து கதைகள் எழுதி அசுர சாதனைப் புரிந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் சினிமாவிலும் இவ்வளவு சாதனை புரிந்திருக்கிறார் என்பதை இப்போது தமிழ்நாடு இ.பேப்பர் மூலம்தான் அறிந்தேன்.


  தமிழ்நாடு இ.பேப்பரின் பன்முகம் இணைப்பு இதழ், ஒரு பெரிய பல்சுவை புத்தகமாக இருக்கிறது. அதில்தான் எத்தனை எத்தனை சுவாரஷ்யங்கள்! கதை,கட்டுரை, தகவலென்று எவ்வளவோ முத்து முத்துகளாக கொட்டிக்கிடக்கின்றன. அதைப்பற்றியெல்லாம் எழுதுவது என்றால் எழுதி மாளாது என்பதால் இந்த கடிதத்தை இத்துடன் நிறைவு செய்கிறேன்!


-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.