தமிழக அரசு ஊழியர்களுக்கு அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் அரசின் செலவில் இலவச காப்பீடு செய்யும் திட்டம் ஒன்றை தமிழக முதல்வர் அறிவித்து 7 வக்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
இதன்படி விபத்தில் மரணம் அடையும் அரசு ஊழியர் ஒருவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் விபத்து இன்சூரன்ஸ் ஆக வழங்கப்படும். இயற்கை மரணம் அடைவோருக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
இது அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கும்.
அரசு பணியாளர்களின் அதிருப்தியை கொஞ்சமாவது போக்குவது தான் முதல்வரின் திட்டம். தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் பழைய ஓய்வூதியத்தை அறிவித்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மறுபுறமோ மத்திய அரசு டாஸ்மாக் ஊழலை நன்றாக கிளறிக் கொண்டே இருக்கிறது. தேர்தல் வியூகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் போட்டி ஆரம்பித்து விட்டது.
மக்களை குஷிப்படுத்தி வெற்றியை அடைவது என்பது திமுகவின் பாணி.
பாஜகவோ திமுக அரசில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை உலகுக்கு காட்டி மக்கள் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயல்கிறது. இது பாஜகவின் பாணி. விசாரணை வளையத்தில் முடிந்தவரை பல திமுகவினரை மாட்டி விட்டால் கட்சிக்கு பலவீனம் ஏற்படும் என்று கணக்கு போடுகிறது.
" இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன். ஆனால் எனக்கு பேரும் புகழும் கிடைக்கவில்லை "
என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருத்தப்பட்டு இருக்கிறார். உலகுக்கே சமாதான புறாவாக அவர் ஆசைப்படுகிறார். அவரது அமைதி முயற்சிகள் அனைத்துமே புகழுக்காக செய்யப்படுபவை என்று புரிகிறது.
ஆப்பரேஷன் சிந்தூர்
தங்க எழுத்துகளால் பதிவாகும் என்று
அமித்ஷா கூறியிருக்கிறார்.
மத்திய அரசு சிந்தூர் ஆபரேஷனை மிகத்தீவிரமாக மக்களிடம் தெரிவித்து வருகிறது.
பிரபல அரசியல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் தனி கட்சி தொடங்கி இருக்கிறார்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வாக்குறுதிகளை நிறைவேற்ற
வில்லை என்று குற்றம் சாட்டி அவருக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறார். கையெழுத்து இயக்கத்துக்காக பீகார் முதல்வரின் கிராமத்துக்குள் கட்சியினருடன் செல்ல முயன்றபோது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
இதுவரை அரசியலில் தியரியை விற்று பணம் சம்பாதித்தவர் தனது கட்சிக்காக இப்போது பிராக்டிகல் செய்கிறார்.
தியரியை விட " பிராக்டிகல் " கடினமானது என்பதை இப்போது அவர் உணர்ந்திருப்பார்.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்