tamilnadu epaper

வாழ்த்து அட்டை

வாழ்த்து அட்டை

 

 

புத்தக ஷெல்பில் நோட்டுக்களுக்கும் புத்தகங்களுக்கும் இடையில் கைவிட்டு அரையும் முக்காலுமாய் கலர்பென்சில்களை எடுத்து வைத்தாள் வனிதா.

 

புத்தகத்தின் எல்லா பக்கங்களையும் கவிழ்த்து போட்டு தேடி அரை பிளேடை எடுத்து விட்டாள்.

 

பென்சில்களை சீவி வைத்துக் கொண்டாள்.

 

அம்மாவின் சிபாரிசோடு அப்பா அனுமதித்தபின் வாங்கிய இரண்டு போஸ்ட் கார்டுகள்.

 

ஆயத்தமானாள் ஏழாம் வகுப்பு வனிதா. சிவப்பு மை பேனா, ஊதா மை பேனா, கொஞ்சம் தண்ணீர், உடைந்த துணுக்குகளாய் சில வண்ண க்ராயான்ஸ்.

 

இதோ இரண்டு கார்டிலும் விலாசம் எழுதியாயிற்று. ஒன்று முத்து மாமாவிற்கு. மற்றொன்று குமார் சித்தப்பாவிற்கு. இருவரும் வனிதா மீது அதீத பிரியம் உடையவர்கள்.  

 

ஊருக்கு வரும்போதெல்லாம் வனிதாவிற்கு பிடித்தமான இனிப்பு வகைகள், வளையல், டோலாக்கு, கழுத்து மணிகள், பாவாடை சட்டை என வாங்கிக்கொண்டு வந்து குடுத்து அசத்துவார்கள்.

 

அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து வரைந்து அனுப்ப நினைத்தாள் வனிதா.

 

இதோ விலாசம் எழுதிய பக்கத்தின் அரைப்பக்க மிச்சத்தில் நுணுக்கி நுணுக்கி கடிதமும்! எழுதியாச்சு. படிப்பவர்கள் பாடு. லென்ஸ் வச்சு படிக்க வேண்டும்.

 

இரண்டு கார்டிலும் அரையடிஸ்கேல் வைத்து விளிம்புகளில் கோடு போட்டு அவுட் லைன் போட்டாச்சு.

 

ஒன்றில் வளையங்களாகவும், ஒன்றில் திலகமாகவும் டிசைன் செய்தாயிற்று.

 

இரண்டிலும் பக்கத்து வீட்டு பாப்பாவின் வளையல் கொண்டு ரவுண்டு போட்டு பொங்கல் பானைக்கு கழுத்து வரை ரெடி செய்தாயிற்று. கழுத்துப்பகுதி வரைந்து, கோலத்திற்கு இடும் காவி கொண்டு பானை வரைந்து சாக்பீஸை நீரில் நனைத்து பொங்கலை பொங்க வைத்தாயிற்று.  

 

இரண்டு கரும்பு, மஞ்சள் இலைகள், வாழை இலை, பழங்கள், சூரியன், அடுப்பு, மாடுகள் என (அவள் சொன்னால்தான் தெரியும்) வரைந்து தள்ளினாள். இருக்கும் இடத்தில் எப்படியோ வரைந்து கலரெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி வரைந்தாயிற்று.

 

கார்டுகளை கையில் வைத்தபடி, தரையில் வைத்து உட்கார்ந்தபடி, நின்றபடி, மேசையின் மீது வைத்து அருகில் நின்றபடி, தூரத்தில் நின்றபடி பார்த்து பார்த்து ரசித்தாள்.

பெருமை என்றால் அப்படி ஒரு பெருமை பிடிபடவில்லை.

 

இரவு முழுவதும் கூட தலைமாட்டில் வைத்துக்கொண்டு ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

மறுநாள் போஸ்டாபீஸ் சென்று போஸ்ட் பாக்ஸில் போடாமல் காத்திருந்து, தபால்கள் எடுக்கும்போது தபால்காரர் கையில் கொடுத்து பத்திரமாக, கண்டிப்பாக இந்த வாழ்த்துக்களை சேர்க்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டாள்.

 

மொபைலை எடுத்த வனிதாவிற்கு மகளும், மகனும் வாட்சாப்பில் ஒரு forwarded greetings ம், பேரப்பிள்ளைகள் ஒரு ஸ்மைலியும் அனுப்பியிருந்ததை கண்டதும் பழைய நினைவிற்கு போய்விட்டாள்.

 

இவளது வாழ்த்து அட்டைகள் கிடைக்கப்பெற்ற சிற்றப்பனும் மாமனும் வரிந்து வரிந்து இன்லான்டு கவரில் கடிதம் எழுதி தள்ளியிருந்தார்கள். அது மட்டுமில்லை இவள் பெயர் போட்டு த/பெ என்று இவள் அப்பா பெயர் போட்டு வந்த கடிதங்கள்.  

 

கண்களில் கண்ணீரை துடைத்தவள் அது துக்கத்தில் வந்ததா? ஆனந்தத்தில் வந்ததா என்று புரியாமல் போனாள்.

 

எத்தனை இருந்தும் எதையோ இழந்ததுபோல் உணர்ந்தாள். எதுவாக இருக்கும்?

உங்களுக்கு தெரிகிறதா?

 

வி பிரபாவதி