tamilnadu epaper

வாழ்வதே இலக்கு..

வாழ்வதே இலக்கு..

உறவுகளைப் பகைக்கலாம்
ஊரைப் பகைக்கமுடியுமா?

தேருக்கு வடம் பிடிக்கலாம்
தெருச் சண்டைக்கு அடம்
பிடிக்கலாமா?

யாரையும் வெறுக்கமுடியாது
எவரையும் ஒதுக்கமுடியாது
வாழ்வில் இந்த இரண்டும்
எப்போதும் உண்டு.. 

நாள் முழுக்கப் பரிவுடன்
இருப்பதோ
ஆண்டுக்கணக்கில் தனித்து
இருப்பதோ
என்றைக்கும் தொடராது..

இயற்கையின் யாவும்
அளந்தபடிதான் படைக்கப்
பட்டிருக்கிறது..


அளவு என்பது அடுத்ததன்
வாழ்விற்கு இடமளிப்பது
நம்மின் வாழ்வையும் நாமே
வாழ அனுமதிப்பது…

மனிதநேயத்திற்கு ஆயிரம்
அவதாரம் உண்டு
அவதாரம் எடுக்கவேண்டிய
அவசியமில்லை
இருக்கும் அன்பை இழக்காமல்
கொண்ட உறவைக் கெடுக்காமல்
பசித்திடக் கிடைக்கும் பருக்கைபோல
வாழக் கிடைக்கும் தருணங்களில்
வாழ்ந்துகொள்ளலாம்..

ஏற்கெனவே அளந்து போட்டதில்
என்ன மேலும் ஒதுக்கவும்
பகைக்கவும் வெறுக்கவும் இருக்கிறது?

மண்புழு தொடங்கி மாயிருவிசும்பில்
பறக்கும் விமானத்து மனிதர்கள்
வரையில் இயங்கவோர் இடமிருக்கு
எதுவும் நிரந்தரமில்லை
வாழும்போது கிடைக்கும்
வழியில் வாழ்ந்துகொள்வதே
விதித்த வாழ்வின் இலக்கென
வாழ்வோம்..

ஹரணி, தஞ்சாவூர்-2