நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்"
என்று" />
அன்னை பாரத நாடு அந்நியர் ஆங்கிலேயரிடம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் அடிமைப்பட்டு கிடந்தது. நமது வளங்கள் எல்லாம் சுரண்டப்பட்டன.
"பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்"
என்று பாரதியும் நமது தலைவர்களும் நினைவூட்டிய போது சாதி, சமய, அதிகார போதையில் நிரம்பி சண்டையிட்டுக் கொண்டிருந்த நமது மக்கள் தாய் மண்ணை காக்க வீறு கொண்டு எழுந்தனர். தூங்கிக் கிடந்த தமிழர்களை தட்டி எழுப்பியதில் தலைவர்களோடு தமிழ்ப் புலவர்களின் பங்கும் அளவிடற்கரியது. விடுதலைப் போரில் நமது கவிஞர்களின் பங்கை சிறிது நினைவு கூறுவோம்.
*மகாகவி பாரதியார் :*
விடுதலைக்குப் பாடுபட்ட கவிஞர்கள் என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கும் வருபவர் எட்டயபுரத்து எரிமலை மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார் தான். பாரதியை பலகோணங்களில் பார்த்தாலும் விடுதலைக் கவிஞர் என்றே கண்முன் ஓடிவருகிறார். பாரதியார் தமிழுக்கு கிடைத்த தவக்கொழுந்து.
"நீடுதுயர் நீக்க பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூர சொற்கோ
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம் பாடிவந்த மறவன் புதிய
அறம் பாட வந்த அறிஞன்"
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அறம்பாடி நீடுதுயிலில் இருந்த தமிழர்களைத் தட்டி எழுப்பி சுதந்திரத் தீ மூட்டிய கவிஞர் பாரதியார். "கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ?" என கேள்வி எழுப்புகிறார்.
"கண்ணீர் விட்டே வளர்த்தோம் இப்பயிரை சர்வேசா - இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?"
என மனமுருக கேள்வி கேட்டார். விடுதை பெறுவதற்கு முன்பே
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று "
அறிவித்த முதல் கவிஞர் பாரதியாகத்தான் இருக்க முடியும்.விடுதலை என முரசரைந்து சமூகத்தில் எல்லா நிலையில் உள்ளவருக்கும் விடுதலை என அறிவிப்பு செய்தவரும் இவரே.
இவரது பாவடிகளால் பலரும் உணர்வு பெற்றனர். முதியோர் இளமை பெற்று வீறு கொண்டு எழுந்தனர். இந்தியா என்னும் இதழ் நடத்தி பல இடர்பாடுகளுக்கு இடையேயும் இந்திய விடுதலைக்கு வித்திட்டவர் பாரதி என்றால் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
*மதுரகவி பாஸ்கரதாஸ் :*
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் புரட்சிக் கவியாய் வாழ்ந்தவர் மதுரகவி பாஸ்கரதாஸ் ஆவார்.
"கொக்கு பறக்குதடி பாப்பா வெள்ளைக்
கொக்கு பறக்குதடி பாப்பா"
என்ற புரட்சிப்பாடலை எழுதியவர் இவர்தான். இவரது பல பாடல்களை வெள்ளை அரசாங்கம் தடை செய்தது. இவரது பாடல்களைப் பாடி சிறை சென்ற நடிகர் நடிகைகள் பலர்.
அந்நாட்களில் எத்தனையோ நாடகப் பாடலாசிரியர்கள் இருந்தாலும் முடிசூடா மன்னராக விளங்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். இவர் நாடகக் கவிஞர் மட்டுமல்ல பாரதிக்கு ஈடான தேசியக் கவிஞர் எனப் போற்றத் தகுந்தவர். பாரதியாரின் பாடல்கள் அவரது காலத்தில் பரவவில்லை. ஆனால் பட்டிதொட்டியெங்கும் பாடப்பட்டு விடுதலைக்கு ஆதரவான உணர்ச்சியைத் தூண்டியது பாஸ்கரதாஸ் பாடல்கள். விடுதலைப் போரில் சிறை சென்ற பெருமையும் பாஸ்கரதாஸூக்கு உண்டு.
திரைப்பாடலாலும் தேசியக் கருத்தை புகுத்தியவர் பாஸ்கரதாஸ். முதல் பேசும் படமான காளிதாஸில் பாஸ்கரதாஸின் பாடல் இடம் பெற்றது. அது;
"இராட்டினமாம் காந்தி கை பாணமாம்
நம்மைக் காத்திடும் பிரமாணம் - சுதேசி "
என்பது தான். 1933 ல் வெளியான 'வள்ளி' படத்தில் பாஸ்கரதாஸ் எழுதிய ஆலோலம் பாட்டு பெரும் புகழ் பெற்றது.
"ஆலோலம் ஆலோலம் ஆலோலம்
அன்னம் கௌதாரிகள் ஆலோலம்
வெட்கம் கெட்ட வெள்ளை கொக்குகளா
விரட்டி அடித்தாலும் வாரிகளா!என்ற திரைப்பாடலிலும் தேசியம் பாடிய கவிஞர் பாஸ்கரதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
*திரு.வி.க. :*
அரவிந்த் கோஷால் நடத்தப்பட்ட "வந்தே மாதரம்" என்ற வீரம்செறிந்த பத்திரிகையும், சென்னை கடற்கரையில் விபின் சந்திரபாலர் நிகழ்த்திய பேச்சும், திலகர் சிறையடைப்பும் ஒரு கவிஞரை சுதந்திர போராட்டத்தில் குதிக்கச் செய்தது. அவர் தான் திரு.வி.க என அழைக்கப்பட்ட தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார்.
ஆங்கில அரசால் ரௌலட் மசோதா உருவாயிற்று. அதனை காந்தியடிகள் தீவிரமாய் எதிர்த்தார். காந்தியடிகள் அதுகுறித்துப் பேச தமிழ்நாட்டிற்கு திக்விஜயம் செய்தார். தலைவர் சேலம் விஜயராகவாச்சாரியார் தந்த கடிதத்துடன் அரக்கோணத்தில் காந்தியடிகளைச் சந்தித்தார். கூட்டத்தில் காந்தியடிகளின் பேச்சை திரு.வி.க மொழிபெயர்த்தார். அந்த அளவுக்கு தலைவர்களுடன் நெருங்கிப் பழகி சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற கவிஞர் திரு.வி.க.
*நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை :*
"தமிழன் என்றோர் இடமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு!"
என்ற பாடல் வரியை கேட்டவுடன் நம் நினைவுக்கு வரும் கவிஞர் நமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையாவார்.
"கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்
கண்டதில்லை கேட்டதில்லை
சண்டை இந்த மாதிரி
காந்தி என்னும் சாந்தமூர்த்தி
தேர்ந்து காட்டும் நன்னெறி
பண்டு செய்த புண்ணியம் தான்
பலித்ததே நாம் பார்த்திட"
என்ற நாமக்கல் கவிஞரின் பாடலைப் பாடி தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் உப்புச் சத்தியாகிரகத்தின் போது உப்பு எடுக்க வேதாரண்யம் நோக்கி வீர நடைபோட்டனர். வெற்றியும் பெற்றனர். பின்னாளில் அவர் தமிழக அரசவைக் கவிஞராய் தமிழகத்தை அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் கவி வரிகளால் அனல் மூட்டி சுதந்திர தீயை பரவச் செய்த இந்த செந்தமிழ் கவிஞர்களின் சுதந்திர போராட்ட நிகழ்வுகளை நினைவு கூர்வோம். பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து அதனை பேணிக் காப்போம்.
*- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.*