நாகர்கோவில், மார்ச்.17-–
வரும் 2035ம் ஆண்டு விண்வெளியில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் திட்டவட்டமாக கூறினார்.
நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகர் மருத்துவமனை 60-வது ஆண்டு விழா மற்றும் டாக்டர் ஜெயசேகரனின் ௧௦௦வது பிறந்தநாள் விழா டாக்டர் ஜெயசேகரன் நர்சிங் கல்லூரியில் நடந்தது. ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரஞ்சித் ஜெயசேகரன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:–
விண்வெளி துறையில் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு கிரியோஜனிக் தொழில்நுட்பத்தை நாம் வெற்றிகரமாக தயாரித்துள்ளோம். நிலாவில் தண்ணீர் இருப்பதற்கான மூலக்கூறுகள் இருப்பதை உலகில் முதல் முதல் கண்டுபிடித்தது இந்தியாதான். பல நாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்களை நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் மூலமாக விண்ணிற்கு அனுப்பி வைப்பது பெருமைக்குரியதாகும். 2035-ல் விண்ணில் இந்தியா சார்பில் விண்வெளி மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசினார்.