??
அன்று திலீபன் வீட்டிற்கு மிகவும் தாமதமாகத்தான் வந்தான். சற்று கவலையுடன் காத்திருந்த அருணனுக்கு அவனைப் பார்த்ததும் தான் மனம் அமைதியாயிற்று.
"ஏண்டா இன்னைக்கு இத்தனை லேட் பண்ணிட்டே? உடம்புக்கு ஒன்றும் இல்லையே," என்று கரிசனத்துடன் விசாரிக்க, திலீபன்," ஒன்றுமில்லை! இன்று ஒரு அறிவிப்பில்லாத மீட்டிங். நேரம் நீண்டு கொண்டே போய்; இப்போதுதான் ஒரு வழியாக முடிந்தது. ஸாரிடா! ஃபோன் பண்ணியிருக்க லாம். மெசேஜாவது போட்டிருக்கலாம். நாளை வீட்டு வாடகை ட்ரான்ஸ்ஃபர் பண்ணணும். இந்த மாதம் என் முறை இல்லையா? யாராவது என்னைப் பார்க்க வந்தார்களா? " என்று கேட்டான். ஃப்ளாட் நம்பர் 325ல இருக்கும் சுபாஷிணி தான் நீ வந்து விட்டாயா, என்று ஒரு முறை, எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். என்னவாம்".என்றான் அருணன்.
பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு காவல் நிலையத்திற்கு கூட வரமுடியுமா என்று கேட்டிருந்தாள். அவ்வளவுதான். 'நாளைக்கு போகலாம்' என்று நான் குறுஞ்செய்தி அனுப்பி விடுகிறேன்." என்று திலீபன் பதிலளித்தான். " திலீபா! இன்னொரு விஷயம். அவங்க காரை நம் பார்க்கிங் ஏரியாவில் நிப்பாட்டுகிறாள். நமது இரு சக்கர வாகனம் வைக்க, எடுக்க சங்கடமாயிருக்கு. நாளைக்கு நீ அவளிடம் இது பற்றி பேசி விடு. இவள் இங்கு குடி வந்ததிலிருந்து இது ஒரு பிரச்சனை." என்று அலுத்துக் கொண்டான், அருண். " டேய்! போனா போகிறது! நாம்தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே! அவங்க அப்பாவின் அலுவலக கார் அவங்க பார்க்கிங் ஏரியாவில் நிற்கிறது. இவங்களது சின்ன மாருதி கார்தானே,! நம்மைக் கேட்டுதான் பார்க் பண்ணிட்டு இருக்காங்க.இதைப் போய் பெரிது படுத்தாதே' என்று பேச்சை முடித்தான், திலீபன்.
இப்படியே நாலைந்து மாதங்கள் கழிந்தன. அருணன் அதிகாலையிலேயே அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டியிருப்பதால்., அவனது ஸ்கூட்டரை எடுக்க இடைஞ்சலாயிருப்பதை திலீபனிடம் சுட்டிக் காட்டிய படியே இருந்தான். திலீபன் அவனை சமாதானப் படுத்திக் கொண்டே இருந்தான்.
நேற்று மாலை அவனது ஸ்கூட்டரை பார்க் பண்ண இடைஞ்சலாக, சுபாஷிணி காரை நிறுத்தியிருந்தாள். அருணன் அவளை ஃபோனில் கூப்பிட்டு காரை முறையாக நிறுத்தும்படி வேண்ட;தான் வருவதற்கு இரண்டு மணிநேரம் ஆகும்; காத்திருக்கவும்." என்று குறுஞ்செய்தி வந்தது.
அருணுக்கு வந்த கோபத்தில் சுபாஷிணியை அலைபேசியில் கூப்பிட்டு பேச முயன்றான். அழைப்பை அவள் நிராகரித்துக் கொண்டிருந்தாள். வேறு வழியின்றி தன் இரு சக்கர வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு அவளுக்காக காத்திருந்தான். ஏழு மணிக்குதான் அவள் வந்தாள். " என்னங்க இப்படி பார்க் பண்ணிட்டீங்க! எங்க பார்க்கிங்கில் நான் வண்டியை நிறுத்த முடியாமல் திண்டாடிட்டு இருக்கிறேன். நீங்க உங்க வண்டியை எங்கள் இடத்தில் நிறுத்திவிட்டு போயிருக்கீங்க. சாவதானமா வந்திருக்கிறீங்க. ஒரு வருத்தம் தெரிவிக்கும் வார்த்தை கூட இல்லையா? என்று கேட்டதும்; அவளுக்கு வந்ததே ஒரு கோபம்" அருணன்! கவனமா பேசுங்க . மாதாமாதம் பார்க் பண்ணுவதற்கு நான் முள்ளங்கி பத்தை மாதிரி சுளையா இரண்டாயிரம் கொடுத்து விட்டுதான் நிறுத்துகிறேன்; சும்மா ஒண்ணும் இல்லை" என்று கத்திப் பேசவும்;அருணன் வாயடைத்து நின்று விட்டான்.".
இப்போது மன்னிப்பு கேட்பது அருணின் முறை ஆயிற்று. "மன்னிக்கவும் சுபாஷிணி! நீங்கள் வாடகை கொடுத்துக் கொண்டு இருப்பது எனக்குத் தெரியாது" என்று அவளிடம் சமாதானமாக பேசும் முயற்சியில் இருக்கவும்; திலீபன் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.
உற்ற நண்பனை சந்திக்கும் துணிவில்லாமல் ஆணி அடித்தது போல் திலீபன் நிற்க; அருணன் அருகிலிருக்கும் பேயிங் கெஸ்ட் அபார்ட்மெண்ட் நோக்கி வேகமாக தன் இருசக்கர வாகனத்தை செலுத்திக் கொண்டு இருந்தான்.
சசிகலா விஸ்வநாதன்