tamilnadu epaper

வெற்றிக்கு அடிகோலும் படிகள்- திருமாமகள்

வெற்றிக்கு அடிகோலும் படிகள்- திருமாமகள்

 

 

பொறுமை என்றால் என்ன? அது எப்பொழுது ஒரு மனிதனுக்கு வரும். சிந்தித்தோமேயானால் நிறைய உண்மைகள் புலப்படும். 

 

 ஒருவருக்கு வாழ்க்கையில் துன்பமே இல்லை. அவர்கள் கோடு போட்டால் அதிஷ்டம் ரோடு போடுகிறது என்றால், அவருக்கு கர்வம், மமதை, ஆணவம், இதைத் தவிர எதுவும் வராது. பொறுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார். அதனால்தான் இரவு பகல் போல இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை ஒரு மனிதன் உணர வேண்டும். இன்பம் வரும் போது ஆகாயத்துக்கும் பூமிக்கும் மகிழ்ச்சியில் குதிக்கும் ஒரு மனிதன் துன்பம் வரும்போது ஏன் முகம் சோர்கிறான்? 

 

துன்பம் ஒருவனை சென்று அடையும் போது, தன்னைப் போல அவனுக்கு பொறுமை என்பது வந்துவிடும். என்ன கொஞ்சம் நேரம் எடுக்கும் அவ்வளவுதான். இதுவும் கடந்து போகும் என்று அவன் நினைக்க ஆரம்பித்தால் பொறுமை அவனை சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கும். ஒருபோதும் அவனை விட்டு நகராது. ஒரு ஆங்கில பழமொழி படித்துள்ளேன். எந்த ஒரு பழக்கத்தையும் 24 நாட்கள் நாம் தொடர்ந்தோமேயானால் அது நம்முள் பசை போல ஒட்டிக் கொள்ளுமாம். பொறுமையை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டியதுதான். இப்பொழுது நாம் வைத்துக்கொள்வோம் நமக்கு பொறுமை வந்து விட்டது. அடுத்து என்ன? உறுதி. 

 

பொறுமை உள்ளவர் எல்லோருக்கும் உறுதி என்பது இருக்குமா என்று தெரியாது. அந்த உறுதி என்பது ஒரு மனிதனுக்கு எப்பொழுது வரும். வாழ்க்கையில் நிறைய அவமானங்களை ஒருவன் சந்திக்கும்பொழுது, முதல் நாள் கையை ஓங்கி அடித்தவனை இவனும் அடிப்பான். ஏன் கையை ஓங்கி அடிக்கிறான்? அவனுக்கு உள்ளே இருக்கின்ற அகங்காரம். அதனால அவன் ரௌத்திரம் பழகுகிறான். ஒரு சிறிய மண்புழுவை மிதித்தால் கூட அது இறந்து போகும் தருவாயில் தன்னுடைய தலையை தூக்கும். அதனுடைய வலி அது. ஆறறிவு படுத்த மனிதனுக்கு ஆன்ம வலி. அது வேண்டுமென்றோ? அதே அவமானம் இரண்டாவது முறை வரும்போது கோபம் மட்டும் வரும். மூன்றாவது முறை நினைப்பான் நமக்கு ஏன் கோபம் வரவேண்டும் அவன் சொன்னதில் எதுவும் உண்மை இல்லையே என்று. அதன் பிறகு சூரியனைக் கண்டு நாய் குலைக்கிறது என்பது போல அவன் கண்டு கொள்ளாமல் போகும்பொழுது மனதில் உறுதி வந்து நன்றாக இரும்பு தூண் போல் இறுகிப் போய்விடும். நம்முடைய மனதை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால் அடுத்தவர்களுடைய வார்த்தைகள் நம்மை பாதிப்பது கிடையாது என்பது மனரீதியான உண்மை. இப்போது பொறுமை வந்து விட்டது உறுதியும் வந்து விட்டது. அடுத்து என்ன?  

 

 வாழ்க்கையில் ஒரு படி மேலே செல்லப் போகிறோம் என்பதன் அடித்தளம். இப்பொழுது நம்மை நம்பி ஒரு பொறுப்பை சிலர் ஒப்படைக்கும் போது, சில தோல்விகள் முதலில் வரத்தான் செய்யும். அது வீட்டில் கொடுக்கப்படும் பொறுப்பாகட்டும் அலுவலகத்தில் கொடுக்கப்படும் பொறுப்பாகட்டும், அந்த சமயத்தில் தோல்விக்கும் வெற்றிக்கும் இடையே பொறுமையையும் உறுதியையும் கொண்டு நாம் திணித்து விட வேண்டும். அப்பொழுது நமக்கு தெரிவது என்னவெனில், எதனால் தோல்வியடைந்தோம்? எங்கே நாம் தவறு செய்தோம்? அதற்குரிய படிப்பினை நமக்கு நிச்சயம் கிடைக்கும். இங்கே நான் ஒன்று சொல்வதற்கு விழைகிறேன். வாழ்க்கையில் நமக்கு நடக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சிலரைப் போல் நமக்கு வெற்றி கிடைக்காது அதேபோன்று நாம் வாழ்க்கையில் எல்லோருடனும் பழகும் பொழுது ஒரே மாதிரியாக இருக்காது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணநலன்கள் மாறுபடும். வாழ்க்கையில் நாம் சந்திப்பதாகட்டும் சாதிப்பதாகட்டும் எதுவாக இருந்தாலும் நாம் அதனுடைய படிப்பிணியை எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த நிகழ்ச்சி கொடுத்த கசப்பு உணர்வை ஒரு பொழுதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. கசப்பு உணர்வை எடுத்துக் கொண்டவன் எப்பொழுதும் மற்றவர்கள் மேல் பழிவாங்கும் எண்ணத்துடன் தான் இருப்பான். பாடங்களை எடுத்துக் கொண்டவன் அடுத்தடுத்து வெற்றிபடிகளில் ஏறிக்கொண்டே உச்சத்துக்கு போய் விடுவான்

 

 வெற்றியை நோக்கி நாம் போகும்போது, மூன்று சறுக்கல்களோ, நான்கு சருக்கல்களோ, ஐந்தாவது முறை விடாமுயற்சியுடன் தொடர்ந்தோமேயானால் வெற்றி நம்மை பிணைத்துக் கொள்ளும். 

 

 பொறுமைக்குப் பிறகு உறுதிக்கு பிறகு, விடாமுயற்சிக்கு பிறகு வெற்றி நம்மை வந்து அடைந்து விட்டது. இதனால் ஒன்று நமக்கு என்ன தெரிகிறது என்றால் தோல்வியை சந்திக்கும்போது வெற்றிக்கு வழி கட்டாயமாக பிறக்கும. வாழைப்பழத் தோலை உரித்தால் தான் உள்ளே இருக்கும் பழத்தை சாப்பிட முடியும். தோல் என்னும் தோல்வியை நாம் புறம் தள்ளினால் தான் வெற்றிக்கனியை சுவைக்க முடியும்.

 

 இப்போது புரியும்படி நான் சொல்கிறேன். நாம் ஒரு மிகப்பெரிய சிற்றுந்து வைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லது ஒரு விமானம் வைத்துக் கொண்டிருக்கிறோம், அது நம்மிடம் உள்ளது என்பதற்காக அதை ஆற்றிலோ கடலிலோ கொண்டு ஓட்ட முடியுமா? இது எது எங்கெங்கு ஓடுமோ அது அது அங்கங்கு தான் ஓடும. 

 

 நீங்கள் உடனே என்னை கேட்கலாம் ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டி ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்று. அது அவசர காலங்களில் நடப்பது. ஓடம் பழுதடைந்தால் அந்த ஓடத்தை சரி செய்வதற்கு நாம் மரவேலை செய்பவர்களை கொண்டு தான் பார்க்க வேண்டும். அப்போது அது வண்டியில் ஏறித்தான் ஆக வேண்டும். அதேபோல, வண்டியானது ஆற்றில் அக்கரையை கடக்க வேண்டும் என்றால் அது ஓடத்தில் ஏறித்தான் ஆக வேண்டும். நாம் எது எது எந்தெந்த பயன்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

 

 பொறுமை வந்துவிட்டது உறுதி வந்துவிட்டது நம் தோல்வியை நிறைய சந்தித்தோம், விடாமுயற்சியுடன் வெற்றியும் கண்டு விட்டோம் அடுத்தது நாம் என்ன செய்ய வேண்டும்?

 

 நமக்கு எல்லாம் இருக்கிறது என்பதால் நமக்கு இஷ்டப்பட்ட வேலையை செய்ய முடியாது. நம்மிடம் என்ன திறமை இருக்கிறதோ அந்த திறமையை உயர்த்திக் கொண்டே போக வேண்டும். உதாரணத்துக்கு நமக்கு நன்றாக படம் வரைய வருகிறது என்றால் நாம் அதை முயற்சி செய்து அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு வியாபாரம் நன்றாக வருகிறது என்றால் அந்த வியாபாரத்தில் படிப்படியாக எப்படி முன்னேற வேண்டும் என்று அனுபவ பாடங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

அவரவர்கள் தமக்குரிய இடங்களிலேயே திறமையாகச் செயல்படுவதே சிறப்பு. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளுமா? இல்லையே.

 

 உயர்வான விஷயங்களை நம்மால் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, செய்யும் சிறு விஷயத்தை சிறப்பாகச் செய்யும் போது அது நம்மை வாழ்க்கையில் அது உச்சத்தில் (pinnacle)வைக்கும் என்பதிலும், அதுவே இனி வரப்பபோகும் மிகப் பெரிய தொடர் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை.

 

 முயன்றால் முடியாதது எதுவுமில்லை. வாருங்கள் முயல்வோம் வெற்றிகனியை எட்டுவோம். 

 

 திருமாமகள்