லக்னோ,
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த 2 இளம்பெண்களை வேலை வாங்கி தருகிறோம் என கூறி 3 பேர் காரில் அழைத்து சென்றுள்ளனர். லக்னோ நகரில் காரை நிறுத்தி வெளியே சென்ற அந்த கும்பல் பீர் வாங்கி வந்து காரிலேயே குடித்தனர். இதன் பின்னர் மீரட் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது, காரில் இருந்த 5 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், இளம்பெண் ஒருவரை காரில் இருந்து வெளியே தள்ளி விட்டனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் பின்னர் உயிரிழந்து விட்டார். அந்த 3 பேரும், கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த சந்தீப் மற்றும் அமித் என்றும் காசியாபாத் நகரை சேர்ந்த கவுரவ் என்றும் தெரிய வந்தது.
காரில் இருந்த சிறுமியை 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். எனினும், மீரட் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில், புலந்த்சாகர் மாவட்டத்தின் குர்ஜா பகுதியில், அவர்களிடம் இருந்து அந்த சிறுமி தப்பினார். இதன்பின்னர், போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினார்.
இதனால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், அலிகார்-புலந்சாகர் நெடுஞ்சாலை அருகே அந்த கும்பல் சென்ற சொகுசு ரக காரை வழிமறித்தனர். அப்போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது.
இந்த சம்பவத்தில், கவுரவ் மற்றும் சந்தீப் ஆகியோரின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது. 2 கைத்துப்பாக்கிகள், வெடிக்க தயாராக உள்ள மற்றும் காலியான தோட்டாக்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களுக்கு எதிராக குர்ஜா காவல் நிலையத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டு தினேஷ் குமார் சிங் கூறினார்.