சொல்லுளி கவிஞர்
வால் பிடித்து வாழத் தெரியாத, கால் பிடித்தும் வாழத் தெரியாத திரு. ம. விஜயன் அவர்களை மேடையில் இரு கைகளையும் நீட்டி சிம்மக்குரலில் முழங்கும் போராட்ட கனலராக பார்த்திருப்பீர்கள். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொள்கை அரசியலும் அரசியல்களமும் இவரை அப்படியாக சுவீகரித்துக்கொண்டது. இவரை நான் ஒரு நாளும் இந்தளவில் மட்டுமே பார்த்ததில்லை. விஜயன் ஒரு கவிஞன். எப்பொழுதும் கவிதைமனம் கொண்டிருப்பவர். இதை இவரிடம் நெருங்கி பழகியவர்களால் மட்டுமே அவதானிக்க முடியும்.
இவர் பள்ளத்தான்மனை எனும் கவித்துவ ஊரில் பிறந்தவர். மேடுகளைக் கரைத்து பள்ளத்தை நிரப்பி வாழும் பரப்பை சமப்படுத்துபவர்கள் வாழும் மனையே பள்ளத்தான்மனை. ஊரின் இயல்புகேற்ப இவரது பேச்சு, மூச்சு, மொழியில் சமத்துவம் வேர்க்கொண்டிருப்பதுடன் கவிமனம் சாரல் கொண்டிக்கிறது.
புதுக்கோட்டை இன்றைக்கும் கவிக்கோட்டைதான். அந்தளவிற்கு எண்ணிக்கையாலும் செறிவாலும் கவிப்பரப்பு கொண்ட நிலம். தற்கால புதுக்கோட்டை படைப்பாளர்களில் முதலில் நூல் வெளியிட்டவர்கள் யாரெல்லாமென்று புள்ளி விபரமெடுத்தால் திரு. விஜயன் அவர்களுக்கு தனித்த ஓரிடமுண்டு. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே காதல் + சமுதாயம் = காகிதம் எனும் தலைப்பில் கவிதை நூல் வெளியிட்டவர். அவருக்குள் எப்பொழுதும் ஊற்றுக்கொண்டிருக்கும் கவிதையை அவர் தொடர்ந்து இறைத்திருந்தால் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய நவீனத்துவமான, சுத்திகரிக்கப்பட்ட மொழியின் நெசவாளனாக விஜயன் திகழ்ந்திருப்பார். இடைப்பட்ட காலத்தில் உழைக்கும் மக்களுக்கான போராட்டக் களத்தில் தன் முழு ஆற்றலையும் உரநீராகப் பாய்ச்சும் பொருநராக மாறிப்போனார். அவருக்குள் இயல்பாக ஊற்றெடுக்கும் கவிதையை தற்போது எழுதுகோல் சால் கொண்டு இறைக்க வந்திருக்கிறார். வந்தவர் விட்ட இடத்திலிருந்தே கவிதைக் கண்ணியைப் பிடித்திருக்கிறார்.
கவிதை முன்பு போலில்லை. மொழியால், வடிவத்தால், சொற்கட்டால் மாறியிருக்கிறது. மூப்பு மொழி இளமையாகியிருக்கிறது. நளினத்திலிருந்து நவீனத்துவமாகியிருக்கிறது. படிமமாக இருந்த கவிதை குறியீடாகியிருக்கிறது. கவிதை தன்னைக் காத்துக்கொண்டு கவிஞனையும் காக்கும் கேடயமாகியிருக்கிறது. நேராக வில் அம்பு பாய்ச்சும் போர்க்கலையைத் துறந்து வளரி வீசும் வித்தையாகியிருக்கிறது. மரபணு நீக்கப்பட்ட விதையாகவும் செறிவூட்டப்பட்ட விதையாகவும் கவிதை ஆகியிருக்கிறது. இதெல்லாம் தெரியாதவரல்ல விஜயன்.
விஜயன் எழுத்தின்பால் திரும்புவது கவிஞர் எனும் அடைமொழி பெறுவதற்காக அல்ல. தான் கவிஞர் என்று ஊருலகத்திற்குப் பறைச்சாற்றுவதற்காகவும் அல்ல. அவருக்குள் இயல்பாக புதைந்திருக்கும் போராட்டத் தனலை நவீனப்படுத்தும் வடிவமாக கவிதையைப் பார்க்கிறார். தனக்குள்ளிருக்கும் அக்னியை அடைக்காத்தது போதுமென்று குஞ்சுகளாக காகிதத்தில் இறக்கிவைக்கிறார். நன்கு நிதானித்தே அவர் கவிதை செய்யும் வேளாண்மைக்குத் திரும்பியிருக்கிறார். இவரது குரல் நலியுமிடத்தில் இனி இவரது கவிதைக் குஞ்சுகள் பேசும். இவரது கவிதைகள் மொழியைக் காக்க புறப்பட்ட சொல்லூற்று அல்ல. போராட்டக்குரலுக்கு வலுசேர்க்கும் சொல்லுளி.
மொழி அலங்காரமில்லாத சொற்கோவை இவருடையது. உவமை, உவமேயமில்லாத சொற்கட்டு. வேலிகள் காப்பதில்லை என்கிற இந்நூல் விஜயனைக் கவிஞராகக் காக்கும். இந்நூல் இவரைக் கவிஞனாக மட்டும் மீட்டுருவாக்கவில்லை. இளைய பருவத்திற்கு அவரை உருமாற்றியிருக்கிறது. விஜயன் முன்னே விடவும் இனி வேகமாக இயங்குவார். சொற்களை இறைத்துக்கொண்டல்ல. கவிதைகளைப் பாய்ச்சிக்கொண்டு. நல்வரவு கவிஞரே!
- அண்டனூர் சுரா