tamilnadu epaper

வைராக்கியம்

வைராக்கியம்

மேகலா முடிவு செய்து விட்டாள்.

இனி ஆனந்துடன் சேர்ந்து வாழ்வதில் பிரயோஜனம் இல்லை.எந்நேரமும் குடி அடி உதை.எதிர்த்துக் கேட்டும்

பயனில்லை.

 

    செத்துப் போய் விடலாம்தான்.

ஹரிணி, வாணி கதி என்னவாகும்? எனக்குப் பின்னால்

இவர்களுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யப் போவது யார்?

இந்த குடிகாரன் இவர்களின் வாழ்க்கையையும் அல்லவா சீரழித்து விடுவான். நினைக்கவே நெஞ்சம் பதறியது மேகலாவுக்கு.

 

  இரு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சேலத்தில் இருக்கும் அண்ணன் வீட்டுக்கு கிளம்பினாள்.

மேகலா.அங்கும் விதி விளையாடியது. அண்ணி மாலதியின் ஏச்சுப் பேச்சுகளையும் வசவுச் சொற்களையும் வாங்க வேண்டியதாய் இருந்தது .

 

    அவர்களுக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்த போது மேகலாவுக்கு

பளிச்சென்று பட்டது பக்கத்திலிருந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர். ஹரிணியையும் வாணியையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடித்து டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.ஒன்றாம் தேதி அன்று கைக்கு கிடைக்கும் சம்பளம் அடுத்த நாளே அண்ணியின் கைக்குச் சென்றுவிடும்.அண்ணனின் கை கால்களில் விழுந்து கடனை உடனை வாங்கி பிள்ளைகள் இருவரையும் படிக்க வைத்தாள்.

 

     காலங்கள் உருண்டோடின.

ஹரிணியும் வாணியும் படித்து முடித்து வேலைக்கு சென்று வர ஆரம்பித்தனர். அவர்களின் சம்பளத்தில் கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்த போது

புது தெம்பு வந்தது போல் இருந்தது மேகலாவுக்கு. 

 

    அன்று.வீட்டில் புதிதாக ஒரு குரல் கேட்கவே யாராக இருக்கும் என்று எட்டிப் பார்த்தாள்.முகம் முழுக்க தாடியும் இடுங்கிய கண்களும் 

மெலிந்து போன உடலுமாக 

ஆனந்த் பேசிக் கொண்டிருந்தான் 

 

    மேகலாவை பார்த்த அவன் 

"என்னை மன்னிச்சிடு மேகலா.

நான் முன்ன மாதிரி இல்ல .திருந்திட்டேன். . உன்னோட அருமை பெருமையெல்லாம் எனக்கு இப்பத்தான் தெரியுது. நம்ம மறுபடியும் ஒண்ணா சேர்ந்து நல்லா வாழலாம். அனுமதிப்பியா?"

கண் கலங்க கேட்டான் ஆனந்த்.

 ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் சட்டென்று சொன்னாள மேகலா : "புதுசா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வாழுங்க. அதுக்கு வேணும்னா அனுமதி

 தரேன் "என்று கூறிவிட்டு அவன் முகத்தைக் கூட பார்க்காமல் நடந்தாள் மேகலா.

 

மு.மதிவாணன்

வெற்றி இல்லம்

குபேந்திரன் நகர்

அரூர் 636903