tamilnadu epaper

ஸ்விக்கி சின்னான்

ஸ்விக்கி சின்னான்

குறுங் கதை- 145

??‍♂️ஸ்விக்கி சின்னான்??‍♂️

                வாசலில் குப்பை சேகரிப்பவரின் ‌வண்டி சப்தம் கேட்டது. "மல்லி! வேன் வந்துடுச்சு; இரண்டு குப்பை பக்கெட்டுகளையும் வெளியில் எடுத்து வை. கையைக் கழுவிட்டு அந்த ஃப்ளாஸ்கில் இருக்கும் டீயை இரண்டு பேருக்கும் நிரவி விளம்பு.மல்லி" முதலில் டீ ஊற்றி விட்டு, பிறகு , குப்பை பக்கெட்டுகளை எடுக்கிறேன். எனக்குக் கூட முன்ன பின்ன டீ தருவே; குப்பை அள்ளுபவர்களுக்கு ராச உபசாரம்; வேறு எந்த வீட்டில் நடக்கும்;" என்று கேலி பேசிக் கொண்டே, டீ ஃப்ளாஸ்க்கை எடுத்தாள் மல்லி. வெளியே போனவள், அம்மா" இன்று புது பையன். அவன் வேலையை எழுதிக் கொடுத்து விட்டானாம்." என்று தகவல் அளிக்க நான் யோசனையில் ஆழ்ந்தேன். தெருவில் குப்பை சேகரித்து கொண்டிருந்தவன், அவரை, இவரைப் பிடித்து எப்படியோ, ஒரு குப்பை சேகரிக்கும் கன்ட் ராக்டரிடம் குப்பை வேனை ஓட்டும் வேலையை வாங்கினவன்; ஏன் திடுமென வேலையை விட்டான்? இனி என்ன செய்யப் போகிறேன்? " முதன் முதலாக யுனிஃபார்ம் போட்டு கெத்தாக ஒரு வேலை; என பெருமையாய் என்னிடம் சொல்லிக் கொண்டான். ஆனாலும் " இந்த"குப்பை" என்ற பெயர் என்னோடு ஒட்டிக்கிட்டு,விடாது போலிருக்கே! என்னை எல்லாரும் 'குப்பை சின்னான்' என்று பட்டப் பெயர் வைத்து விட்டார்கள்" என்று என்னிடம் அலுத்துக் கொண்டாலும், அதில் கொஞ்சம் பெருமையும் கலந்திருந்தாக எனக்குத் தோன்றியதோ?

                இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் காலை, வாசல் அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்தவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. வந்தவன் சின்னான்!.."வணக்கம் , அம்மா! புது வேலையில் சேர்ந்து விட்டேன். ஸ்விக்கியில் டெலிவரி பார்ட்னர் ஆக இப்போது உங்கள் முன். "குப்பை சின்னான் " இன்று " ஸ்விக்கி சின்னான்" ஆகி விட்டேன். மாலை கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரம் டிகிரிக்குப் படிக்கிறேன். " குப்பை வண்டி ஓட்டிக் கொண்டே பள்ளிப் படிப்பை முடித்து விட்டேன். என்னால் ரெகுலர் கல்லூரியில் படிக்க இயலாது. மூன்று வருடம் படித்துக் கொண்டே. வங்கி, ஆயுள் காப்பீடு, மற்றும் அரசு எழுத்தர் தேர்வுக்குத் தயாராக ,ஒரு ஆவல் இருக்கிறது. மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து காலையில் நீங்கள் தந்த தேநீர் தான் என் பசியை ஆற்றியது. என் சொந்த சம்பாதித்யத்தில், இன்று காலை உணவு உங்களுக்காக" அடையார் ஆனந்த பவனில் இருந்து; நல்ல ஃபில்டர் காஃபி யுடன்; என் அன்புபரிசாக இதை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். 'குப்பை சின்னான் இன்று ஸ்விக்கி சின்னானாக நிற்கிறேன். மேலும் உயர வாழ்த்துங்கள், அம்மா!" என்று பணிவுடன் பேசின சின்னானை கட்டி அணைத்து முத்தமிடத் தோன்றியது. முளைப்பாரை புதைப்பார் உண்டோ?

 

சசிகலா விஸ்வநாதன் 

 

.