இரவு மணி பதினொன்று. கார்ப்பரேட் கட்டடத்தின் லாபி மயான அமைதியில் இருந்தது. சிசிடிவி மானிட்டர்களின் மினுமினுப்பும், ஏர் கண்டிஷனரின் சத்தமுமே அந்த இடத்தின் உயிராக இருந்தன.
அவன் லிப்ட்டுக்குள் ஏறினான்.
ஏற்கனவே உள்ளே ஒரு பெண் நின்றிருந்தாள். வெளிர் முகம். சோர்ந்த கண்கள், எங்கோ தொலைந்த பார்வை.
அவன் கேட்டான். "எந்த ஃப்ளோர் போகணும்?”
“அண்டர் கிரவுண்ட் பார்க்கிங்,” என்றாள்.
லிப்ட் கதவுகள் மூடின. மேலிருந்து கீழ் இறங்கும் அந்த சில விநாடிகள் அவள் எதுவும் பேசவில்லை. அவனும் எதுவும் கேட்கவில்லை. லிப்டின் கண்ணாடி சுவரில் அவள் பிரதிபலிப்பு தெளிவாக இல்லை. என்பது அவனுக்குத் தோன்றியது.
டிங்.
பார்க்கிங் ஃப்ளோர் வந்ததும் கதவுகள் திறந்தன.
அவன் வெளியேறினான். ஒரு கணம் திரும்பிப் பார்த்தான்.
லிப்டுக்குள்… யாரும் இல்லை.
சாதாரணமாக அதிர்ச்சியடைய வேண்டிய இடம். ஆனால் அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அமைதியாக நடக்கத் தொடங்கினான்.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்தான் செக்யூரிட்டி. முகத்தில் பதட்டம்.
“சார்… உங்க கூட லிப்ட்ல ஒரு பெண் வந்தாளா?” குரல் நடுங்கக் கேட்டான் செக்யூரிட்டி.
அவன் நின்றான். " ஆமாம்...வந்தாள்,” என்றான்.
செக்யூரிட்டி விழுங்கிக் கொண்டான்.
“சார்… அவள் பெண் இல்ல… பேய். போன வருஷம் இதே லிப்ட்ல மூச்சுத் திணறி இறந்த ஒரு பெண்ணோட ஆவி.... அடிக்கடி லிப்ட்ல தெரியும்.”
அவன் முகத்தில் புன்னகை பரவியது.
“அப்படியா?” என்றான்.
“இன்னொரு விஷயம்… அவளோட காதலன்… அவ இறந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சி தாங்காம தற்கொலை பண்ணிட்டான்,” செக்யூரிட்டி சொன்ன போது, அவன் சிரித்தபடி கேட்டான்.
“காதலன் பேரு என்ன?"
“கோபி,” என்றான் செக்யூரிட்டி.
"ஆமாம்.. கோபிதான்"
“அப்படின்னா... உங்களுக்கு அவனைத் தெரியுமா?” என்று செக்யூரிட்டி குழப்பமாக கேட்டான்.
“தெரியாம என்ன?... அவன்தான் இங்க தினமும் ஆவியா வந்து… காதலியை பார்த்துட்டு போறானே.”
செக்யூரிட்டியின் கண்கள் விரிந்தன.
“அப்படியா… நான் பார்த்ததே இல்லையே…”
அவன் மெதுவாக நடந்துகொண்டே சொன்னான், "அதான்… இன்னிக்கு பார்த்துட்டியே.”
“எங்கே?” செக்யூரிட்டி திரும்பித் திரும்பிப் பார்த்தான்.
மீண்டும் அவனிடம் திரும்பிய போது, அந்த இடத்தில்… அவன் இல்லை.
லிப்டின் கதவுகள் தானாக மூடிக் கொண்டன.
அண்டர் கிரவுண்ட் பார்க்கிங்கில், சற்றுத் தொலைவில், இரண்டு நிழல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து நடந்து கொண்டிருந்தன.

(முற்றும்)
முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?