Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கிவரும் நிலையில், ஈரானும் சரியான பதிலடி கொடுத்து வருவதால், போர் மிகவும் தீவிரமடைந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில், ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், கடலில் தத்தளித்த 30 பேரை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. மேலும், 101 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.
ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதலா.?
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்துவரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கடற்பகுதிகளில் வலம் வரும் ஈரானிய போர்க்கப்பல்களை அமெரிக்க படைகள் தாக்கி வருகின்றன.
இதுவரை, ஈரானின் 17 போர்க்கப்பல்கள் தாக்கப்பட்டு, மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை அருகே அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்கு அருகே, இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஈரான் நாட்டின் போர்க்கப்பல் ஒன்று, இன்று காலை மூழ்கியுள்ளது. ஐரிஸ் டெனா என்ற அந்த கப்பல், ஃப்ரிகேட் வகை போர்க்கப்பல் என கூறப்படுகிறது.
இந்த கப்பல் மூழ்குவதாகவும், உடனடியாக உதவி தேவை என்றும், கப்பலில் இருந்த மாலுமிகள் இலங்கை கடற்படையிடம் உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து, 2 கடற்படை கப்பல்கள், ஒரு விமானத்துடன் அங்கு விரைந்த இலங்கை கடற்படையினர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 30 ஈரானிய வீரர்களை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், கப்பலில் இருந்த 101 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை, இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் உறுதி செய்துள்ளார்.
இந்த கப்பல் எப்படி மூழ்கியது என்பது பற்றிய சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே, இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் ஈரான் போர்க்கப்பல் சென்றபோது, அது தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சென்ற அந்த கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
இத்தகைய சூழலில், இச்சம்பவம் குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, 180 மாலுமிகளுடன் இருந்த ஈரானின் கப்பல் மூழ்கியதாகவும், அதில் 30 பேர் காயமடைநததாகவும், அவர்களை மீட்டு இலங்கையின் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் போர்க்கப்பல் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளால் குண்டுவீசி தாக்கப்பட்டதா என இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அதற்கு ஆளும் அரசு சார்பில் உடனடியாக பதிலளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.