அண்ணாமலையார் கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் உலா வந்த சுவாமி – தாயார்!
திருவண்ணாமலைக்கு டிச.3 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தீபத் திருவிழாவின் 6-ஆம் நாள் விழாவில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெறுவது வழக்கம். அதன்படி, திங்கள்கிழமை காலை 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட 63 நாயன்மார்களுக்கு கோயிலில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதையடுத்து, காலை 10 மணிக்கு நாயன்மார்கள் வீதியுலா தொடங்கியது.
நாயன்மார்களைத் தொடர்ந்து, சமயக் குறவர்கள் நால்வரும், யானை வாகனத்தில் விநாயகரும் வீதியுலா வந்தனர். இறுதியாக, வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், வெள்ளித் தேரில் அருணாசலேஸ்வரர், வெள்ளி விமான வாகனங்களில் பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
கோயில் ராஜகோபுரம் எதிரே இருந்து புறப்பட்ட பஞ்ச மூர்த்திகள் வீதி உலா தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகள் வழியாகச் சென்றது. வழிநெடுகிலும் காத்திருந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம்: தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான (நவ. 30) பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் விநாயகர் தேரோட்டம் தொடங்குகிறது.
தொடர்ந்து, முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் தேர் என பஞ்ச ரதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீதி உலா வரும். இதையொட்டி மர தேரில் பொருத்தப்படும் கலசத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார் எழுந்தருளும் பல்வேறு தேர்களுக்கு கலசங்கள் பொருத்தப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன.
உள்ளூர் விடுமுறை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், கார்த்திகை மாதம் மகா தீப திருநாள், டிசம்பர் மூன்றாம் நாள் (03-12-2025) புதன்கிழமை நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் (தேர்வுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03ஆம் நாளை உள்ளூர் விடுமுறையாக அனுபவிக்கும் அனைத்து அலுவலர்களும் மற்றும் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக டிசம்பர் மாதம் 13-ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிவிக்கப்பட்ட உள்ளூர் தினம் மாற்றியல் தாள்முறி சட்டம் 1881 கீழ் வரும் பொது விடுமுறை இல்லை என்பதால், டிசம்பர் மூன்றாம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடன் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.