அண்ணாமலை பெயரை சொல்லி ரூ.10 லட்சம் மோசடி: பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது
கோயம்புத்தூர், அக். 6–
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைச் சொல்லி ரூ. 10 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் -– நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று, ரூ.50 லட்சம் இழப்பீடு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சட்ட உதவி செய்ததற்காக அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.கவை சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்த 3 பேரும் மேலும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என, பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுவதாக இறந்த திருமூர்த்தியின் சகோதரர் அருணாச்சலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ‘தனது சகோதரன் திருமூர்த்தி உயிரிழந்த நிலையில், இதுதொடர்பான வழக்கிற்கு அதே ஊரை சேர்ந்த பாஜகவை சேர்த்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் உதவி செய்தனர். இதற்கு இழப்பீடு வந்தவுடன் ரூ.10 லட்சம் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டனர். தற்போது மீண்டும் தேர்தல் செலவுக்கு ரூ.10 லட்சம் பணம் வேண்டும் என அண்ணாமலை பெயரை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என குற்றம்சாட்டி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக அருணாசலத்தின் தந்தை நாகராஜ், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல், ‘எனது பெயரை சொல்லி பணம் வாங்கியதாக வெளியான வீடியோவிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என அண்ணாமலையும் விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து, இதுதொடர்பாக பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அண்ணாமலை தனது உதவியாளர் மூலம் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், நாகராஜ் அளித்த புகாரின் பேரில், அண்ணாமலை பெயரை பயன்படுத்தி ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில், பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன், பாஜக உறுப்பினர் கோகுலகண்ணன், அன்னூர் குமாரபாளையத்தைச் சேர்ந்த ராசுகுட்டி ஆகிய 3 பேரை அன்னூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, 3 பேர் மீதும் கொலை மிரட்டல், பணம் பறித்தல் ஆகிய இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கைதான கோகுலகண்ணனிடம் இருந்து பாஜக, திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர் அட்டை இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.