டிஜிட்டல் கைது மோசடி; ரெயில்வே அதிகாரியிடம் ரூ.20 லட்சம் பறித்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

வங்கிக்கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரியை பெண் ஒருவர் மிரட்டியுள்ளார்.
மும்பை,
தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் புசாவல் பகுதியில் ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி ஒருவர், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 69 வயதான இவருக்கு, கடந்த மாதம் 17-ந் தேதி அடையாளம் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து வீடியோ கால் வந்தது. இந்த அழைப்பை ஏற்றபோது, எதிர்முனையில் போலீஸ் சீருடை அணிந்த பெண் ஒருவர் தோன்றினார். அப்போது, அவர் தன்னை மும்பை போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டார்.
பின்னர் அவர், ரெயில்வே அதிகாரியிடம், “உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்” என்று கூறி மிரட்டினார். மேலும் அவரை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதாக கூறிய அப்பெண், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமெனில் ரூ.20 லட்சம் பணம் அனுப்பவேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனால் பயந்துபோன ரெயில்வே அதிகாரி அப்பெண் கூறிய வங்கிக்கணக்குகளுக்கு ரூ.20 லட்சத்தை பரிமாற்றம் செய்தார். இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரெயில்வே அதிகாரி, சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.20 லட்சம் பறித்த மோசடி பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?