சபரிமலை கவச முறைகேடு விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு உத்தரவு
ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கைகளை நேரடியாக கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கடந்த 1999-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட சிலையின் கவசம் பொலிவு இழந்ததால், கவசத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்திடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அந்த கவசத்தின் எடை 42.800 கிலோவாக இருந்தது.
பணிகள் முடிந்து சபரிமலைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டபோது, எடை குறைவாக இருந்தது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அப்போது தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் எடை குறைந்த விவகாரத்தை விசாரிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு, விஜிலென்ஸ் குழுவுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டுவின் விஜிலென்ஸ் குழு இந்த விவகாரத்தில் அதன் முதல்கட்ட விசாரணையின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. முன்னதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு விஜிலென்ஸ் குழு உன்னிகிருஷ்ணனிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தியது. அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து கேரள ஐகோர்ட்டு, போலீஸ் சூப்பிரண்டு சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டது. மேலும் சைபர் போலீஸ் அதிகாரிகளும் குழுவில் இடம்பெறுவர். இதுகுறித்த விசாரணை ரகசியமாக நடத்தப்பட வேண்டும். அறிக்கைகளை நேரடியாக கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
கேரள ஐகோர்ட்டின் சிறப்பு விசாரணை குழுவை அமைக்கும் உத்தரவை சபரிமலை தேவசம்போர்டு மந்திரி வாசவன் வரவேற்றுள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் சபரிமலை தங்க கவசங்கள் எடை குறைந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே கேரள சட்டசபையில் சபரிமலை அய்யப்பன் கோவிலின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் எடை குறைந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த பிரச்சினையை எழுப்பி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தேவசம்போர்டு மந்திரி வாசவன் பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் சட்டசபைக்கு வெளியே காந்தி சிலைக்கு அருகேயும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.