ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

துபாய், செப்.26-


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மகுடத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவுடன் மோத உள்ளது.


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 5-வது லீக்கில் பாகிஸ்தான், வங்காளதேச அணிகள் கோதாவில் குதித்தன. வங்காளதேச கேப்டன் லிட்டான் தாஸ் காயத்தில் இருந்து மீளாததால் விக்கெட் கீப்பர் ஜேக்கர் அலி கேப்டன்ஷிப்பை கவனித்தார். டாஸ் ஜெயித்த அவர் பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் திணறியது. சகிப்சதா பர்ஹான் (4 ரன்), சைம் அயூப் (0), பஹர் ஜமான் (13 ரன்), ஹூசைன் தலாத் (3 ரன்), கேப்டன் சல்மான் ஆஹா (19 ரன்) 11 ஓவருக்குள் நடையை கட்டினர். இதில் சைம் அயூப் நடப்பு தொடரில் 4-வது முறையாக டக்-அவுட் ஆகியிருக்கிறார்.


49 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்து தத்தளித்த பாகிஸ்தானை, விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் (31 ரன்), ஷகீன் ஷா அப்ரிடி (2 சிக்சருடன் 19 ரன்), முகமது நவாஸ் (25 ரன்) ஆகியோர் சரிவில் இருந்து மீட்டு 130 ரன்களை கடக்க வைத்தனர். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. கடைசி கட்டத்தில் வங்காளதேச வீரர்கள் சில கேட்ச் மற்றும் ரன்-அவுட் வாய்ப்புகளை தவற விட்டனர். பீல்டிங்கில் கச்சிதமாக செயல்பட்டு இருந்தால் பாகிஸ்தானை இதை விட குறைந்த ஸ்கோரில் மடக்கி இருக்கலாம். தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹதி ஹசன், ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.


அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேசம் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 44 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. அந்த வீழ்ச்சியில் இருந்து அவர்களால் நிமிர முடியவில்லை. அதிகபட்சமாக ஷமிம் ஹூசைன் 30 ரன்கள் எடுத்தார்.


20 ஓவர்களில் அந்த அணியால் 9 விக்கெட்டுக்கு 124 ரன்களே எடுக்க முடிந்தது.


இதனால் பாகிஸ்தான் 11 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. சூப்பர் 4 சுற்றில் 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது தோல்வியே தழுவிய வங்காளதேசம் வெளியேறியது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%