ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி மதுரையில் இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள் தீவிரம்
14ஆவது ஆண்கள் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகின்றன. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் இப்போட்டியில், இந்த முறையே முதல் தடவையாக 24 நாடுகள் பங்கேற்கின்றன. வரலாற்று – கலாச்சார மரபுகளால் பிரசித்தி பெற்ற மதுரை, இப்போது உலக விளையாட்டு மேடையிலும் தனித்த இடத்தைப் பெறும் தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. செயற்கை புல்வெளியுடன் உலகத் தர மைதானம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச அளவுகோலுக்கு ஏற்ப செயற்கை புல்வெளி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதுடன், பார்வையாளர்களுக்கான இருக்கைகள், ஒளி–ஒலி வசதிகள், பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகள், வீரர்கள் மற்றும் நடுவர்களுக்கான தங்கும் இடங்கள், எல்லாம் இறுதிக்கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றன. முக்கிய பிரமுகர்களுக்கான தனிப்பிரிவு, வீரர்கள் பயிற்சிக்கான அலாதியான தளம் உள்ளிட்ட வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இதுதொடர்பாக விளையாட்டு துறை அதிகாரிகள் கூறுகையில்,“வீரர்கள் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மதுரைக்கு வருவார்கள். அதற்குள் அனைத்து ஏற்பாடுகளும் முடித்து வைக்கப்படும்” என தெரிவித்தனர். நுழைவு ஏற்பாடுகள் தினசரி போட்டியை காண மதுரை மக்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்றாலும், பாதுகாப்பு மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு தினசரி 1,500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. அதற்காக ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். ஆதார் அட்டை விவரங்கள் அவசியம். தினசரி பார்வைக்கு ஒரு நாளுக்கு முன்பே பதிவு செய்ய அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையின் விளையாட்டு மரபும் புதிய அத்தியாயமும் மதுரையை உலகம் அறிந்ததைப் போல, மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மஹால், சமணர் படுகைகள், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கீழவெளி வீதி சென் மேரிஸ் சர்ச், கோரிப்பாளையம் பள்ளிவாசல் போன்ற பாரம்பரியங்கள் அதன் அடையாளங்களாக இருந்தாலும், விளையாட்டுத் துறையில் பெரும்பாலும் ஜல்லிக்கட்டு என்ற பாரம்பரிய விளையாட்டின் மூலம் மட்டுமே பேசப்பட்டு வந்த நகரமாக மதுரை காணப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு பனையடி ஹாக்கி கிளப் உள்ளிட்ட அணிகள் தமிழக ஹாக்கி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளன. இன்று வரை, பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேசிய, மாநில அளவிலான தடகள வீரர்களை உருவாக்கி வருகின்றன. இத்தகைய விளையாட்டு மரபில், உலக இளையோர் ஹாக்கி போட்டி நடைபெறுவது மதுரையின் விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. மதுரைக்கு சர்வதேச உயர்வு இப்போட்டி மதுரையின் உலகளாவிய அடையாளத்தை மேலும் உயர்த்தும் வாய்ப்பாகக் கருதப்படுகிறது. சர்வதேச அளவிலான புதிய விளையாட்டு வசதிகள், எதிர்காலத்தில் மேலும் பல தேசிய சர்வதேச போட்டிகளை வரவேற்கும் நிலை, மக்களின் விளையாட்டு ஆர்வத்துக்கு ஊக்கம், எல்லாம் இந்த நிகழ்வின் மூலம் உறுதி செய்யப்பட உள்ளது. நவம்பர் 28 முதல் உலக ஜூனியர் ஹாக்கி போட்டியை நடத்தப் போகும் மதுரை, இனி கலாச்சார தலைநகரம் மட்டுமல்ல; உலக விளையாட்டு மேடையில் புதிய அடையாளம் பெற்ற நகரமாகவும் உருவாக உள்ளது.