ஆன்லைன் வர்த்தகம்; 70 வயது பெண்ணிடம் ரூ. 2.49 கோடி மோசடி: 2 பேர் கைது
சென்னை, செப். 25–
சென்னையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் 70 வயது பெண்ணிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, பாலவாக்கம் பகுதியைச்சேர்ந்த விளையாட்டு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 70 வயது பெண் ஆன்லைன் முதலீட்டு விளம்பரத்தை பார்த்து கடந்த 20.11.2024 முதல் 18.01.2025 வரையிலான காலத்தில் எச்இஎம் – செக்யூரிட்டிஸ் என்ற பெயரில் செயல்படும் முதலீட்டு தளத்தில் ஆன்லைன் மூலம் சுமார் ரூ.2.49 கோடி முதலீடு செய்துள்ளார். இவர் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, மேற்படி நிறுவனத்தினர் பல்வேறு காரணங்களை கூறி, பணத்தை திரும்ப எடுப்பதை தடுத்து, மேலும் பணத்தை முதலீடு செய்யும் படி கேட்டுள்ளனர்.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ஆகஸ்ட் 19–ந் தேதி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில் மத்தியகுற்றப்பிரிவு சைபர் கிரைம் உதவி ஆணையாளர் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளரால் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ஏ.இராதிகா வழிகாட்டுதலில், துணை ஆணையாளர் ஸ்ரீநாதா (மத்தியகுற்றப்பிரிவு-4) கண்காணிப்பில், உதவி ஆணையாளர் ராகவி மற்றும் ஆய்வாளர் மேனகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் மோசடி செய்த பணத்தை அனுப்ப, திருப்பூர், ஸ்ரீ சாய் கிருஷ்ணா ஹோட்டலுக்குச் சொந்தமான கணக்கை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த வங்கி கணக்கு எண்ணை வைத்து, வங்கி கணக்கு விபரங்களை முக்கிய குற்றவாளிகளுக்கு வழங்கி கமிஷன் பெற்ற ஜெயராஜ் (32), ராம்குமார் (32) ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் இதே போன்று பல வங்கி கணக்குகளை துவக்கி மோசடி கும்பல்களுக்கு பரிவர்த்தனைகளுக்காக வழங்கி கமிஷன் பெற்றுள்ளது தெரியவந்தது. மேலும் வங்கி கணக்கு விபரங்களை சரிபார்க்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளுடன் தொடர்புடையவை என்பது உறுதி செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் சைதாப்பேட்டை, 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.