ஆயுத பூஜை: செங்கோட்டை, மதுரை, திருவனந்தபுரத்திற்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஆயுத பூஜை: செங்கோட்டை, மதுரை, திருவனந்தபுரத்திற்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை, செப். 29–


ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்கனவே தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கூடுதலா சில சிறப்பு ரெயில்களை இன்று அறிவித்துள்ளது.


இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு இடையே நாளை (30-ந் தேதி) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாளை இரவு 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06075), மறுநாள் மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (06076) திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. 19 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பூதனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனாசேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, கயன்குளம், கொல்லம், வர்கலா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.


இதேபோல், தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு நாளை (30-ந் தேதி) முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. முன்பதிவில்லாத இந்த சிறப்பு ரெயில் 15 பெட்டிகளை கொண்டிருக்கும்.


மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து நாளை (30-ந் தேதி) இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு மெமு ரெயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும். முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த மெமு ரெயில் மொத்தம் 12 பெட்டிகளை கொண்டிருக்கும். மேற்கண்ட ரெயில்களில் சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு ரெயில்களுக்கான முன்பதிவு உடனடியாக தொடங்குகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%