மஹாராஷ்டிராவில் கனமழைக்கு 10 பேர் உயிரிழப்பு; மும்பைக்கு ‘ரெட்’ அலர்ட் வெள்ளத்தில் சிக்கிய 12,000 பேர் மீட்பு

மஹாராஷ்டிராவில் கனமழைக்கு 10 பேர் உயிரிழப்பு; மும்பைக்கு ‘ரெட்’ அலர்ட் வெள்ளத்தில் சிக்கிய 12,000 பேர் மீட்பு



மும்பை, செப் 29–


மஹாராஷ்டிராவில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மும்பை, தானே, பால்கர், ராய்காட், நாசிக் உள்ளிட்ட இடங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்துக்கு வானிலை மையம் ‘ரெட்’ அலெர்ட் விடுத்துள்ளது.


மஹாராஷ்டிராவில் மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொலாபாவில் 12 செ.மீ., சாண்டா க்ரூசில் 9 செ.மீ., சில இடங்களில், 5 மணி நேரத்தில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால், நகரின் முக்கிய சாலைகள் ஹிண்ட்மாதா, காந்தி மார்க்கெட், சுனாபட்டி, மலாட், தஹிசர் மற்றும் மன்குர்ட்சுரங்கப்பாதைகள் வெள்ளக்காடானது. மும்பை மாநகராட்சி ஊழியர்கள் தேங்கிய நீரை உடனடியாக அகற்றினர்.


பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் 11,800-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர்.


கோதாவரி ஆற்றில் உள்ள ஜெயக்வாடி அணைக்கு நீர்வரத்துஅதிகரித்து வருவதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2.92 லட்சம் கன அடியாக உயர்ந்தது. வெள்ள அபாயம் காரணமாக சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பைதான் பகுதியில் இருந்து சுமார் 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். இந்த மாவட்டத்தில் உள்ள ஹர்சுல் வட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.


தயார் நிலையில் மீட்புப் படை


மராத்வாடாவில் உள்ள பீட், நான்டெட் மற்றும் பர்பானி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. மராட்டிய மாநிலம் முழுவதும் 16 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2 கூடுதல் குழுவினர் புனே தலைமையகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.மராத்வாடா மண்டலம் மற்றும் சோலாப்பூர் மாவட்டம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகளை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.


மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று 5 மணி நேரத்தில் 5 செ.மீ. மழை பெய்தது. நேற்று மதியத்துக்கு மேல் மும்பையில் மழை குறைந்தது. இதனால் போக்குவரத்து மற்றும் ரெயில் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.தானே மற்றும் பால்கர் மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது.


தானேவின் பிவாண்டி தாலுகாவில் 71 குடும்பங்களை சேர்ந்த 262 பேர் மீட்கப்பட்டனர். பீட், நாந்தேட் மற்றும் பர்பானி மாவட்டங்களின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. ஆஷ்டியில் உள்ள சாங்வி கோவிலில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 12 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்டது. நாந்தேட் நகராட்சி எல்லைக்குள் பொதுமக்கள் சுமார் 970 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.


நாசிக்கில் கனமழையை தொடர்ந்து கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரங்களில் உள்ள ராம்குண்ட் பகுதியில் சில கோவில்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 21 பேர் மீட்கப்பட்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%