இந்தியா வளர்ந்த நாடாக மாற அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சியில் முன்னேற வேண்டும்: வேந்தர் கோ. விசுவநாதன் வலியுறுத்தல்
வேலூர், செப். 26–
இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமெனில் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சியில் முன்னேற வேண்டும் என விஐடி பல்கலைக்களழக வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் 2025 மூன்று நாள் அறிவுசார் விழா நேற்று தொடங்கியது. அண்ணா அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு தலைமை வகித்து வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது:
விஐடி பல்கலைக்கழகம் கடந்த 1984-ல் 180 மாணவர்களுடன் தொடங்கினோம். தற்போது வேலூர், போபால், சென்னை, ஆந்திரபிரதேசம் என 4 வளாகங்களில் 1 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். விஐடி கல்வி நிறுவனத்தில் ஏன் அதிகமான மாணவர்களை சேர்க்கிறீர்கள் என கேட்கின்றனர். இந்தியா சுமார் 146 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடாக உள்ளது. மக்கள் தொகை அதிமுகள்ள நாட்டில் வளரும் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் வகையில் மாணவர்களை சேர்க்கிறோம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அமெரிக்கா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. கலிபோர்னியாவில் 4 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாக உள்ளது. ஆனால், அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 டிரில்லியின் டாலர்களாக உள்ளது. நாம் அவர்களுடன் போட்டியிட வேண்டும். இந்த நிலையை அடைவதற்கு அறிவியல் தொழில்நுல்டபத்தில் முன்னேற வேண்டும். மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆராய்ச்சி மேம்பாட்டில் வளர்ந்த நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 சதவீதத்துக்கு மேல் செலவிடுகிறது. இந்தியா 1 சதவீதத்துக்கும் குறைவாக செலவிடுகிறது. இந்தியா 2047-ல் வளர்ந்த நாடாக வேண்டுமெனில் அறிவியல், தொழில்நுட்பம், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அபுதாபி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மஜித் அலி அல் மன்சூரி பேசுகையில், ‘‘உலகம் முழுவதும் இணையதளம் முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என அனைத்து கண்டுபிடுப்புகளும் விஞ்ஞானிகளின் ஆர்வம், விடாமுயற்சியில் உருவானவையாகும். மாணவர்கள் தொழில்நுட்ப திறன் வாய்ந்தவர்களாக திகழ வேண்டும்.
உலகளாவிய குடிமகனாக இருப்பதற்கும், நீடித்த நிலைத்தன்மையோடு இருக்க உதவும். அதேபோல செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, பருவநிலை மாற்றம் ஆகிய சவால்களுக்கு மாணவர்கள் தீர்வு அளிக்க வேண்டும். புதுமை என்பது தொழில்நுட்பத்தை மட்டும் மாற்றுவது மட்டுமல்ல. மாறாக மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்” என்றார்.
கவுரவ விருந்தினராக கலந்து கொண்ட நியூஸ்18 நிர்வாக ஆசிரியர் ஆனந்த் நரசிம்மன் பேசுகையில், “புதுமை, படைப்புத்திறனுடன் உள்ள மாணவர்களின் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பாளர்களாக மாற வேண்டும். பலருக்கும் வேலை அளிக்கும் தொழில்முனைவோராக மாற வேண்டும். பழங்கால கட்டமைப்புகளுக்கு சென்று அறிவியல் ரீதியாக பொருத்தி புதுமை படைக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து மாணவர்கள் உருவாக்கிய புதுமை படைப்புகளான ட்ரோன், ஏவுகணை, ரோபோக்கள் உள்ளிட்டவைகளை வேந்தர் கோ.விசுவநாதன், சிறப்பு விருந்தினர் மஜித் அலி அல் மன்சூரி ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.
தொடக்க விழாவில் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி, மேக்ஸிமஸ் இந்தியா நிறுவனத்தின் பிரவீனா பீமவரப்பு, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.