தெலுங்கானாவிலும் காலை உணவுத் திட்டம்: முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
சென்னை, செப்.26-
தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலுங்கானாவிலும் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசினார்.
சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் வணக்கம் நண்பர்களே... என்று தமிழில் கூறி பேசியதாவது:–-
தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாக்க காமராஜர் சிறந்த பங்களிப்பை கொடுத்தார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இதயத்தை தொடும் திட்டம் ஆகும்.
அதிகாலையில் கூலி வேலைக்கு செல்பவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உணவளித்து பள்ளிக்கு அனுப்ப முடியாது. அந்த வகையிலான ஏழை குழந்தைகளை தமிழக அரசு உணவளித்து அரவணைத்துக் கொள்கிறது. அடுத்த கல்வியாண்டு முதல் இந்த திட்டத்தை தெலுங்கானா அரசும் அமல்படுத்தும். இதற்கான ஊக்கத்தை நான் இங்கிருந்தே பெற்றேன்.
நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவுத்திட்டம் ஆகிய 4 திட்டங்களுக்காக தமிழக மக்கள் சார்பில் நான் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். தமிழகத்தின் இந்த 4 திட்டங்களை இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்கள் கண்டிப்பாக செயல்படுத்த முயற்சிக்கவேண்டும்.
சமூக நீதியை பொறுத்தமட்டில் தமிழகத்துக்கும், தெலுங்கானாவுக்கும் ஒரே மாதிரியான கொள்கை உள்ளது. எங்களுக்கு ஊக்கம் அளித்தவராக கருணாநிதி இருக்கிறார். தெலுங்கானாவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. அதில் முதலாவதாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீதமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 27 சதவீதமும் என ஒட்டுமொத்தமாக 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இருக்கிறோம். இதற்கு ஊக்கமளித்தவராக கருணாநிதி இருக்கிறார்.
தெலுங்கானாவில், பெரு நிறுவனங்களுடன் இணைந்து இளம் இந்தியா விளையாட்டு பல்கலைக்கழகத்தை தொடங்கி இருக்கிறோம். இந்தியாவில் 150 கோடி மக்கள் தொகை இருந்த போதிலும் துரதிஷ்டவசமாக கடந்த முறை நடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கத்தைகூட நாம் பெற முடியவில்லை.
2028-ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெறுவோம் என்ற பொறுப்பை தமிழ்நாடும், தெலுங்கானாவும் ஒருங்கிணைந்து ஏற்க வேண்டும். பிரதமரும், அமித்ஷாவும் இதை செய்யமாட்டார்கள். நாம் இதை செய்து முடித்து பதக்கத்தை பெறவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.