இரண்டாம் திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை: அசாம் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

இரண்டாம் திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை: அசாம் பேரவையில் மசோதா நிறைவேற்றம்


 

கவுகாத்தி: முதல் திருமணத்திலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில், அசாம் சட்டப்பேரவையில் இன்று (நவ.27) ‘அசாம் பலதார மண தடை மசோதா - 2025’ நிறைவேற்றப்பட்டது.


அசாம் பலதார மண தடை சட்டம் நவம்பர் 25 அன்று அசாம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, இன்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக மசோதாவை நாங்கள் அனுப்பி வைப்போம். அவர் ஒரு பெண் என்பதால், மசோதாவுக்கு ஒப்புதல் மறுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. இந்த மசோதா பெண்களைப் பாதுகாப்பதையும், பலதார மணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


இஸ்லாம் இயல்பாகவே பலதார மணத்தை ஊக்குவிக்கிறது என்ற பரவலான நம்பிக்கை என்பது உண்மையில் தவறானது. நபிகள் நாயகத்தின் சிந்தனைப் போக்கு பலதார மணத்தை ஊக்குவிப்பதல்ல; மாறாக அதிகப்படியானவற்றைக் கட்டுப்படுத்துவதாகும். முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல், இரண்டாவது திருமணம் இஸ்லாத்தில் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாது" என்று அவர் சட்டப்பேரவையில் கூறினார். மேலும், பலதார மணத்தை தடை செய்த பல முஸ்லிம் நாடுகளையும் அவர் குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர், "நான் மீண்டும் முதலமைச்சரானால், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவேன். இது இந்த அவைக்கு நான் அளிக்கும் உறுதிமொழி" என்று கூறினார்.


பலதார மண எதிர்ப்பு மசோதா, இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக முந்தைய திருமணத்தை மறைப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்கிறது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் இரு மடங்கு தண்டனை விதிக்கப்படும்.


காவல் துறையினரிடம் இரண்டாம் திருமணத்தை மறைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க இந்த மசோதா வழிவகுக்கிறது. அத்தகைய திருமணங்களைச் செய்துவைக்கும் மதகுருமார்கள் அல்லது காஜிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.


இருப்பினும், இந்தச் சட்டம் அசாமின் ஆறாவது அட்டவணைப் பகுதிகளான போடோலாந்து, கர்பி அங்லாங் மற்றும் வடக்கு கச்சார் ஹில்ஸ் ஆகிய தன்னாட்சி கவுன்சிலால் நிர்வகிக்கப்படும் பகுதிகளுக்கு பொருந்தாது. மேலும், பிரிவு 342-இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் பழங்குடியினரும் இந்த மசோதாவின் வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அசாமில் சில பழங்குடியினரின் சட்டங்கள் பலதார மணத்தை அனுமதிக்கின்றன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%