உக்ரைனில் தொடரும் தாக்குதல்; மேற்கத்திய நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
கீவ்,
உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்தது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி விட்டனர்.
எனினும், போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது. இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்து வரும் சர்வதேச சமூகத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார்.
இதனாலேயே புதின் அவருடைய தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார். பொதுமக்களின் வீடு, குடியிருப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி மையங்களின் மீது ரஷியா பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருவதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என குற்றச்சாட்டாக கூறினார்.
தொடர்ந்து அவர், ரஷிய ஆயுதங்களில் மேற்கத்திய நாடுகள் விநியோகித்த பொருட்களின் பயன்பாடு உள்ளன என்றும் அவர் கூறினார். இதுபற்றி அவர் கூறும்போது, ரஷியாவின் ஒரு கின்ஜால் ஏவுகணையில் 96 வெளிநாட்டு தயாரிப்பு பொருட்கள் உள்ளன என கூறினார்.
ஏறக்குறைய 500 டிரோன்களில் 1 லட்சம் வெளிநாட்டு தயாரிப்பு பாகங்கள் உள்ளன. அமெரிக்கா, சீனா, தைவான், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், கொரியா மற்றும் நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இவற்றை உற்பத்தி செய்துள்ளன. இவை அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
சமீபத்தில் 53 ஏவுகணைகள் மற்றும் 500 டிரோன்களை கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியது. அவற்றில் 250 டிரோன்கள் ஷாகித் வகை டிரோன்கள் ஆகும். இதனால், லிவிவ் நகரில் ஒரு குழந்தை உள்பட 4 பேரும், ஜபோரிஜ்ஜியா நகரில் ஒருவரும் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது.