எடப்பாடியின் சுந்தரா டிராவல்ஸ் பஸ்களை மாற்றி புதிய பேருந்துகள் அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்
செந்துறை, ஜூலை 19-
பழனிசாமி ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக, தற்போது புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என தமிழக போக்குவரத்துத் துறை மைச்சர் சிவசங்கர் கூறினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது
: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கான 3,200 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டு எழுத்துத் தேர்வு இந்த மாதம் நடக்கிறது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும். அதன் பிறகு அவர்கள் பணியப்படுத்தப்படுவர்.
புதிய பேருந்துகள்
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது புதிய பேருந்துகள் வாங்காத காரணத்தினால் தான் பழைய பேருந்துகள் ஓடின.
தற்போது எடப்பாடி பழனிசாமி ஓட்டக்கூடிய சுந்தரா டிராவல்ஸ்க்கு எப்படி அவர் ஓனரோ, அதேபோல் ஏற்கனவே ஓடிய சுந்தரா டிராவல்ஸ்க்கும் அவரே ஓனர். அந்த சுந்தரா டிராவல்ஸ் பேருந்தை மாற்றுவதற்காகவே முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்கி 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு அனுமதி வழங்கி, 4,500 பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 15 ஆண்டுகள் ஓடிய பேருந்துகள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் இந்த புதிய பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதை பேருந்தில் பயணிக்க கூடிய அனைவரும் பார்க்கலாம். மஞ்சள் நிற பேருந்துகள் நகர்ப்புறங்களிலும், நீல நிறப் பேருந்துகள் கிராமப்புறங்களிலும் ஓடிக்கொண்டிருப்பதை மக்கள் பார்க்கலாம். அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கும் உரிய புதிய பேருந்துகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்துத்துறை மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.
புதிய உறுப்பினர்கள்
ஓரணியில் தமிழ்நாடு இயக்க பரப்புரையின் மூலம் இதுவரை ஒரு கோடியே 35 லட்சம் பேர் திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். முதலமைச்சருடைய நல்லாட்சிக்கு சான்றாக நாங்கள் போகின்ற இடத்தில் வரவேற்பு அளித்து அவர்களே திமுகவில் இணைத்து கொள்கிற காட்சியை பார்க்க முடிகிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு திறன்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் திரண்டு வந்து அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். 15 துறைகளின் மூலமாக 45 சேவைகள் வழங்குவதற்கு முகாம்கள் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது. வீடு தேடி வரும் அரசு என்று முதலமைச்சர் கூறியது போல மக்களே திரண்டு வந்து மனுக்களை வழங்கி வருகிறார்கள். இது மிகப்பெரிய வெற்றிகரமான நடவடிக்கை.
இவ்வாறு சிவசங்கர் கூறினார்.
===