எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்:
சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார் இன்று த.வெ.க.வில் இணைகிறார்?
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அவர் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன், அதற்கு கட்சி தலைமைக்கு காலக்கெடு விதித்தார். இதனால் அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
த.வெ.க.வில் இணைகிறார்
இந்த நிலையில், அமைதி காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகம் செல்லும் அவர், விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 11.45 மணிக்கு சென்னை தலைமைச்செயலகம் வந்த கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து தனது கோபி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடித்ததை வழங்கினார். அதனை சபாநாயகர் அப்பாவு பெற்றுக் கொண்டார். அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ''இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,'' என்று கூறினார்.
ஏற்கனவே, ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க.வில் இணைந்த நிலையில், தற்போது கே.ஏ.செங்கோட்டையனும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டையன் –
சேகர் பாபு சந்திப்பு
இந்த நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்துக்கு வருவதை கேள்விப்பட்ட அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அவரை சபாநாயகர் அப்பாவுவின் அறைக்கே சென்று சந்தித்து பேசினார். சுமார் 5 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பி.கே.சேகர்பாபு, தற்போது கே.ஏ.செங்கோட்டையனையும் தி.மு.க.வுக்கு இழுக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பேச்சு வார்த்தைக்குப்பிறகு வெளியே வந்த கே.ஏ.செங்கோட்டையனை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறுகேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் யாருடைய கேள்விக்கும் பதிலளிக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
த.வெ.க.வா?, தி.மு.க.வா? என்பது கே.ஏ.செங்கோட்டையன் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதும், அவரது அடுத்த கட்ட நகர்வு என்ன..? என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.