கவர்னர் திமிராகப் பேசுகிறார்; தமிழக வளர்ச்சியைக் கெடுக்க நினைக்கிறார் ஸ்டாலின் கடும் கண்டனம்
கவர்னர் திமிராக பேசுகிறார்; தமிழக வளர்ச்சியை கெடுக்க நினைக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறினார்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி என்பதால் பா.ஜ.க. அரசு பழி வாங்குகிறது. அற்பத்தனமான அரசியல் நடத்துகிறது என்று அவர் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில், 235 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 91 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 1,84,491 பயனாளிகளுக்கு 278கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:–
தந்தை பெரியாரை தந்த ஈரோட்டிற்கு வந்ததில் திராவிட இயக்கத்தின் முதல் தொண்டனாக பெருமைக்கொள்கிறேன். தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கங்கள் இல்லை. தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது. ஜவுளி, மஞ்சள், கைத்தறி ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற நகரம் ஈரோடு.
டிசம்பர் 10-ந்தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும்.
விடுவிக்கப்பட்டவர்களுக்கு
உரிமைத் தொகை
ஈரோடு மண்டலத்தில் 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
டெல்லியில் பல கார்கள் மாறி, யார் யாரையோ எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். விவசாயிகளுக்காக பேச செல்கிறார் என்றால், நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன்.
தமிழகத்தின் வளர்ச்சியை நிரந்தரமாகக் கெடுக்க வேண்டும் என ஒருவர் நினைக்கிறார், அவர்தான் கவர்னர் ஆர்.என். ரவி. தமிழர்கள் தேச விரோதிகள் என கவர்னர் நினைக்கிறார். அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை பயங்கரவாதிகள் உலவும் இடமாக சித்தரிக்க முயற்சிக்கிறார்.
கவர்னர் திமிர் பேச்சு
கவர்னர் திமிராக பேசி இருக்கிறார். அவரது திமிரை அடக்க வேண்டும். மத்திய ஆட்சியில் தான் பஹல்காம் தாக்குதல், டெல்லி குண்டு வெடிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது. தி.மு.க. ஆட்சி என்பதால் பழி வாங்குகிறது பா.ஜ.க. தமிழகத்திற்கான திட்டங்கள் நிராகரிக்கும் போது மட்டும் மத்திய அரசு கம்பி கட்டும் கதை சொல்கிறது.
ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும்போதும் புதிய ரெயில்பாதை திட்டங்கள் குறித்த கோரிக்கையை முன்வைப்பேன். தி.மு.க. அரசு எதைக்கேட்டாலும் தரக்கூடாது என மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துவிட்டது. வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு, நிதி ஒதுக்கும்போது பட்டை நாமம் போடுகிறது பா.ஜ.க. அற்பத்தனமான அரசியல் நடத்துகிறது பா.ஜ.க.
எஸ்ஐஆர் மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ளுங்கள் அதுதான் மிகவும் முக்கியம்
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய அறிவிப்பு
தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திற்கான புதிய அறிவிப்பு களை ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:– கோடிசெட்டிப்பாளையம் நகராட்சிக்கு ரூ.4.50 கோடியில் அலுவலக கட்டிடங்கள் கட்டித்தரப்படும். புஞ்சை புளியம்பட்டி, கோபி செட்டிப்பாளையம் நகராட்சிகளுக்கு புதிய அலுவலகங்கள் கட்டித் தரப்படும்.
சாயப்பட்டறை கழிவு களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும். தோணிமடுவுவில் புதிய தடுப்பணை கட்டப்படும். பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார்.