ஐப்பசி மாத சிறப்புகள்

ஐப்பசி மாத சிறப்புகள்


ஐஸ்வர்யங்கள் நிறைந்த புண்ணிய மாதம் இந்த ஐப்பசி மாதம்! 

புண்ணிய நதிகளில் நீராடி புண்ணியம் தேடிக் கொள்ளும் மாதம் இந்த ஐப்பசி மாதம் . 


சூரியன் துலா ராசியில் நுழைவதால் இந்த மாதம் துலா மாசம் எனப்படுகிறது. தென் கங்கை எனப்படும் காவிரியில் இந்த மாதத்தில் நீராடுவதை துலாஸ்நானம் என்பார்கள். அனைத்து நதிகளும் இந்த மாதம் காவேரியில் சங்கமம் ஆவதாக ஐதீகம்.இந்த மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்வதால் அழகு ஆரோக்யம் ஆயுள் கூடும் என்று காவேரி மகாத்மியத்தில் கூறப்படுகிறது!


காவேரி நதியில் ஸ்நானம் செய்ய முடியாமல் போனாலும் ,இந்த துலா மாதத்தில் 

காவேரி மகாத்மியத்தைப் படித்து ஸ்ரவணம், தானம் போன்றவைகளைச் செய்யலாம்.துலாஸ்நானம் செய்ய மாயவரம் காவேரிக் கரையே உயர்வானதாகும். 


கங்கைக்கு நிகரான காவேரியில் நீராடினாலும் தரிசித்தாலும் அதன் கரையில் தானம் தர்பணங்கள் செய்தாலும் எல்லாப் பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும்.


சிறந்த சிவபக்தரான நாத சர்மா என்பவரும், அவர் மனைவி அனவித்யாம்பிகையும் தம்பதி சமேதராக 

திருவையாற்றிலிருந்துப் புறப்பட்டு, மாயவரம் துலாஸ்நானம் செய்வதற்கு வந்தார்கள். அன்றுதான் ஐப்பசி கடைசி நாளான கடைமுழுக்காகும். இரவாகிவிட்டதால் மண்டபம் ஒன்றில் தங்கி ஈசனை துதித்தனர். 


அதுபோல் கால்கள் ஊனமுற்ற மாற்று திறனாளி ஒருவரும் நடக்கமுடியாமல் தட்டுத்தடுமாறி மாயவரம் வந்து சேரும் போது துலா மாதம் முடிந்த நாள் இரவாகும். இம்மூவரும் துலா ஸ்நானம் செய்யும் பேறு கிட்டாததால் , பெரிதும் கவலையுற்றனர். 


இவர்கள் மூவரின் பக்தியில் கட்டுண்ட சிவபெருமான், அசரீரியாக "ஐப்பசி கடைசி நாளான இன்றோடு துலா ஸ்நானம் முடிந்து விட்டாலும், உங்களுக்காக கார்த்திகை முதல் நாளான நாளை ஒருநாளும் நீடித்துத் தருகிறேன்". என அருளினார். 


அன்று முதல் கார்த்திகை முதல் நாளை 'முடவன் முழுக்கு ' என்று வழங்கலாயிற்று. அன்றே அந்த மூன்று பக்தர்களும் மோட்சம் அடைந்தனர். நாத சர்மா, அனவித்யாம்பிகை தம்பதிகள் ஐக்யமான சிவலிங்கங்கள், மயூரநாத ஸ்வாமி ஆலயத்தில், அபயாம்பிகை சன்னதிக்கு தென்புறத்தில் உள்ளது. இதில் பெண் அடியாரான அனவித்யாம்பிகை ஐக்யமான சிவலிங்கத்தின் மேல் சேலை அணிவிப்பது, வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பாகும். 


ஶ்ரீரங்கம் கோவில் பெருமாளுக்கு இந்த மாதம் முழுவதும் தங்கப் பாத்திர வட்டில்கள், தங்குக் குடம் இவைகளையே உபயோகப் படுத்துவார்கள்.அம்மா மண்டபக் காவேரியில் இருந்து தங்கக் குடத்தில் திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவரப் படுகிறது. வெள்ளிக் குடம் வட்டில்களை இந்த மாதம் உபயோகிக்க மாட்டார்கள். 


அதேபோல் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளிப் பண்டிகையன்று கங்கையில் நீராடுவதும் புண்ணியமாகச் சொல்லப்படுகிறது! நரகாசுரனை பகவான் கண்ணன் வதம் செய்த நரக சதுர்த்தி திதியே தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. நரகசதுர்தசி ஸ்நானம் என்றும் அழைக்கப் படுகிறது. தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆயிற்றா என்று ஒருவரை ஒருவர் விசாரித்து வாழ்த்திக் கொள்கிறோம்.


இந்த மாதத்தில் தான் ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூத்த்தாழ்வார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் அடுத்தடுத்த தினத்தில், அடுத்தடுத்த நட்சத்திரத்தில் (உத்ராடம், திருவோணம், அவிட்டம்)பிறந்தார்கள்!


இம்மாதப் பெளர்ணமியில் சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடப்பது விசேஷமாகும். ஐப்பசிமாத பெளர்ணமியில் சந்திரன் மிகவும் பிரகாசமாகத் தெரிவார். அதே போல ஐப்பசி மாத சந்திரன் பூமிக்கு அருகில் , வருவதால் மிக பிரகாசமாக சந்திரன் ஒளியை வீசுவார் என்று வானவியலும் சொல்கிறது. 


முருகப் பெருமானை சிறப்பிக்கும் கந்த சஷ்டி விழாவும் இம்மாதம் சிறப்பாக நிகழும்.ஐப்பசி மாத அம்மாவாசை ஆன மறுநாளிலிருந்து ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரதம் கடை பிடிக்கப் படுகிறது. இந்த விரத த்தை மேற் கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் அந்த கந்தனே குழந்தையாகப் பிறப்பான் என்று நம்பப்படுகிறது.


இப்பேற்பட்ட தெய்வீகங்கள் நிறைந்த ஐப்பசி மாதத்தினைக் கொண்டாடி மகிழ்வோம்!


வசந்தா கோவிந்தன்

எழுத்தாளர்



வசந்தா கோவிந்தன்

எழுத்தாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%