மாசிலாமணி வழக்கம் போல் காலை ஐந்து மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டார்.
இரண்டு உள்ளங்கைகளையும் சர சரவென்று ஒன்றாகத் தேய்த்துவிட்டு கண்களால் சிறிது நேரம் உற்று பார்த்தார்.
அப்படிச் செய்தால் அன்றைய பொழுது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கை ! அதிர்ஷ்ட வசமாக நிறைய தடவைகள் நேர்மறையாக நடந்திருக்கின்றன.
ஆனாலும் இனி அவர் இஷ்டம்போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம்; நேரத்தை கழிக்கலாம். நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றவருக்கா பொழுதைப் போக்க வழியில்லை ?
பக்கத்தில் பார்வை சென்றது. படுக்கை காலியாக இருந்தது. படுத்திருந்த மனைவி மங்களத்தைக் காணவில்லை. ' ஒருவேளை மறந்து போய் 'நான் ஆஃபிஸ் போக வேண்டுமே என கருதி சீக்கிரமே வேலைகளைச் செய்ய எழுந்து போயிருப்பாளோ ? 'மனதில் கேள்விக் குறியுடன் எழுந்து ஹாலுக்குச் சென்றார்.
சோஃபாவில் மங்களம் ஒருக்களித்துப் படுத்திருப்பது தெரிந்தது. ' பாவம் அசதியாக தூங்குகிறாள், தூங்கட்டும்' என நினைத்து, காலைக் கடன்களைச் செய்து முடித்தார்.
வாசலுக்குச் சென்று பையில் தொங்கிக் கொண்டிருந்த பால் பாக்கெட்டை எடுத்து
வந்தார்.
ஸ்டவ்வைப் பற்ற வைத்து பாலைக் காய்ச்சினார். ஒரு டம்ளரில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு டிகாக்ஷ்னை ஊற்றியவர் , பதமாக பாலைக் கலந்து ஆற்றிக் குடிக்க ஆரம்பித்தார். தொண்டையில் இதமாக இறங்கிய காஃபி புத்துணர்ச்சியைக் கொடுத்தது !
மனைவி கையால் காஃபி குடித்தவருக்கு இன்று தானாக அப்படிச் செய்தது சற்று
வித்தியாசமாகத் தெரிந்தது. அவள் அவள்தான் ; தான் தான்தான் என்ற நினைப்
பும் ஏற்பட்டது.
மனைவியை எழுப்பலாமா என்ற எண்ணம் தோன்றியது. பிறகு வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்று நினைத்தார். என்ன செய்யலாம் என்று நினைத்த போது பார்வை ஃப்ரிட்ஜ் பக்கம் சென்றது.
ஃப்ரிட்ஜில் இருந்த தோசை மாவை வெளியே எடுத்து வைத்த மாசிலாமணி அப்படியே அன்றைக்குத் தேவையான காய் கறிகளையும் எடுத்து வைத்துக் கொண்டார். மனைவி எழுந்து குளித்துவிட்டு வந்தவுடன் சமையல் செய்ய சரியாக இருக்கும் என்ற நினைப்பு ! நேரம் கடந்தது.
பணியிலிருந்து ஓய்வு பெற்றாகி விட்டது . இனி மனைவிக்கு ஒத்தாசையாக
இருக்க வேண்டும். முக்கியமாக வெளி வேலைகளில் இருந்து அவளுக்கு பூரண ஓய்வு கொடுக்க வேண்டும் என்கிற உறுதியான முடிவு மாசிலாமணி மனதில் தோன்றியது.
மணி ஆறு முப்பது ஆனது. மங்களம் எழுந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் எந்தக் கோணத்தில் மாசிலாமணி பார்த்தாரோ அதே கோணத்தில் மனைவி படுத்திருப்பது தெரிந்தது.
இவ்வளவு நேரம் அவள் உறங்கி பார்த்தது கிடையாது. மாசிலாமணிக்கு சந்தேகம் வந்தது. இடது கையை தலைக்கு அண்டம் கொடுத்தபடி வலது கையை தன் தொடை மீது வைத்து ஆடாமல் அசையாமல் இருப்பது கண்டு ஒரு வித பட படப் போடு அருகில் சென்று அவள் தோள் தொட்டார். " மங்களம்…"
பதில் இல்லை. " மங்களம், எழுந்திரும்மா! மணி ஆறரைக்கு மேலாகி ஆகிவிட்டது..:"
ம்ஹூம்! நோ ரெஸ்பான்ஸ் !
மெல்ல அவள் தலையை திருப்பினார். மங்களத்தின் திறந்திருந்த விழிகள் ஆடாமல் அசையாமல் விட்டத்தை நோக்கி நிலை குத்தி நின்றன.
பார்வையில் உயிரில்லை. கன்னங்கள் ஜில்லிட்டுப் போயிருக்க மனைவி மரித்துப் போயிருப்பது தெரிந்தது! கண்களில் நீர் மல்க நடுங்கும் தன் கை விரல்களால் அவளின் இரு கண்களின் இமைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு மூடினார்.
நேற்றுதான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் மாசிலாமணி. ஆனால் இன்று தன்னை விட்டே ஒரேயடியாக மனைவி போய்விட்டது, அவளின் இந்த தாம்பத்ய வாழ்க்கையின் நிரந்தர ஓய்வை அறிவிப்பது போலிருக்க அப்படியே மடக்கி உட்கார்ந்து குலுங்கி அழ ஆரம்பித்தார் .
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
போருர், சென்னை 600 116