
அந்தநாள் நினைவில்
அடிக்கடி வந்திடுவார்
கதை சொல்லித் தாத்தா
கற்பனையின் கருவூலமாய்!
வெற்றிலை மணக்க
வெள்ளையன் வரலாற்றை
வீரமாய் உரைப்பார்
வெண் தாடிச் சிப்பாயாய்!
காக்கா கதை சொல்லுவார்
ஒற்றுமை புரிந்திடும்
காந்தி கதை சொல்லுவார்
சத்தியம் விளங்கிடும்!
கடவுள் கதை கூறுவார்
பக்தி ரசம் பொங்கிடும்
காத்தவராயனைப் பேசுவார்
கைகாலெல்லாம் புல்லரிக்கும்!
கருணைமிகு கண்களில்
கதை மாந்தரே உலாவர
தீக்குச்சித் தெறிப்பாய்
வசனங்கள் வந்துவிழ...
உடல் மொழியில்
காட்சிகள் தெரிய..
உற்சாக ஊஞ்சலில்
உள்ளங்கள் ஆடும்!
ஆழ்மனத்தில் ஆழப்பதியும்
கதையும் கருத்தும்
இன்றும் அவர் குரல்
இதயத்தில் 'லப்...டப்' ஓசையாய்!
==================
முகில் தினகரன்
கோயமுத்தூர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?