கரூர் நெரிசல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கமல்ஹாசன் எம்.பி.,ஆறுதல்
கரூர், அக். 7:
கரூர் வேலு ச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன் திங்கள்கிழமை கரூர் வருகை தந்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் வருகை தந்த கமல்ஹாசன், முதலில் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியையும் உழவர் சந்தையையும் பார்வையிட்டார். பின்னர் விபத்து நடந்த வேலுச்சாமிபுரத்திற்குச் சென்று, நெரிசலில் சிக்கியவர்கள் விட்டுச் சென்ற பொருட்களையும், விபத்துக்கு காரணமாக கருதப்படும் உடைந்த மரக்கிளைகளையும் பார்வையிட்டார்.
நெரிசலில் உயிரிழந்த இரண்டு வயது குழந்தை துருவிஷ்ணுவின் வீட்டிற்குச் சென்ற கமல்ஹாசன், குழந்தையின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிற குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆறுதல் சொல்ல வந்தேன்
செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “இப்போது துக்கம் விசாரிக்க வந்துள்ளேன். குறைகளோ நிறைகளோ கூறும் நேரம் இதுவல்ல. இந்த விஷயத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது. இதைப் பற்றி அதிகம் பேசக்கூடாது. எல்லோரும் நிறைய பேசிவிட்டார்கள். நாங்கள் வந்தது நீதி கிடைக்கவும் ஆறுதல் சொல்லவும்தான்.
பாதிக்கப்பட்டவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்வது என யோசியுங்கள்.
லைட்ஹவுஸ் கார்னர் பாலம் பகுதிக்கு அனுமதி கொடுக்காததற்கு போலீசாருக்கு நன்றி. அங்கு அனுமதி கொடுத்திருந்தால் நதியில் விழுந்து இன்னும் பலர் உயிரிழந்திருப்பார்கள். உரிய நேரத்தில் காப்பாற்ற வந்தவர்கள் இல்லையென்றால் மேலும் பல உயிர்கள் போயிருக்கும்.
பத்திரிக்கையாளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதால்தான் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை வெளியே வந்திருக்கிறது. போலீசாருக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரத்தில் குற்றம் சொல்லா தீர்கள். அவர்களது பணியை செய்ய விடுங்கள்.
இந்த சம்பவத்தில் குற்றச்சாட்டை யார் வைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். நடுநிலையாக நின்று பார்க்க வேண்டும். இதில் சைடு எடுக்காதீர்கள். சைடு எடுத்தால் மக்கள் சைடு இருங்கள்” என்றார்.
இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்ததோடு 110 பேர் காயமடைந்தனர். தற்போது ஐ.ஜி. அஸ்ராகர் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த சம்பவம் தொடர்பாக விசா ரணை நடத்தி வருகிறது.