கிருஷ்ணகிரி, ஜன.
கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 286 பேருக்கு ரூ.1 கோடியே 53 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டன. கலெக்டர் தினேஷ் குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணைகளை வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டம் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற விழாவில், காணொலிக் காட்சி வாயிலாக கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கைவினைஞர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்தும் நோக்கில், கலைஞர் கைவினைத் திட்டம் கடந்த 19.4.2025 அன்று தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024–25ஆம் நிதியாண்டில், 161 பேருக்கு ரூ.67 லட்சம் மதிப்பில் கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 2025–26ஆம் நிதியாண்டில் 286 பேருக்கு ரூ.1.53 கோடி மதிப்பில் கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் வரவேற்பு
இத்திட்டத்தின் கீழ், ரூ.3 லட்சம் வரை பிணையமில்லா கடன் வழங்கப்படுவதுடன், கடன் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 வரை மானியமும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டட வேலைகள், நகை தயாரித்தல், தையல், துணி வெளுத்தல், மலர் வேலைப்பாடுகள், உலோக மற்றும் மர வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், கண்ணாடி மற்றும் சிற்ப வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், படகுக் கட்டுமானம், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், பொம்மை தயாரித்தல், ஓவியம் மற்றும் வண்ணம் பூசுதல், மூங்கில்–பனைஓலை, பிரம்ப வேலைப்பாடுகள், துணி நெய்தல், கூடை முடைதல், தோல் கைவினைப் பொருட்கள் தயாரித்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, பாரம்பரிய ஜவுளி அச்சிடுதல், பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 25 வகை தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கைபேசி எண்ணுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி – தொலைபேசி: 04343-235567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து, கையேடுகள் வெளியிடப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் எம்.சரவணன், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் எம்.ராமமூர்த்தி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மாதேஸ்வரன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.