நாமக்கலில் ரூ.198 கோடி மதிப்பிலான புறவழிச்சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து புதிய சாலைகளுக்கு அடிக்கல்
நாமக்கல், ஜன.
நாமக்கல் நகரில் ரூ.198.12 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலைப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டும், முடிக்கப்பட்ட சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டும் உள்ளன.
நாமக்கல் மாநகராட்சி வேட்டாம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையில், மரூர்பட்டி–வேட்டாம்பாடி மற்றும் வேட்டாம்பாடி–வசந்தபுரம் இடையிலான ரூ.95.12 கோடி மதிப்பிலான இரண்டு புறவழிச்சாலைகளை திறந்து வைத்தார். மேலும், வசந்தபுரம்–லத்துவாடி மற்றும் லத்துவாடி–வள்ளிபுரம் இடையிலான ரூ.103 கோடி மதிப்பிலான இரண்டு புறவழிச்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினருமான நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என். ராஜேஸ்குமார், நாமக்கல் மக்களவை உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், நாமக்கல் மேயர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரூ.104 கோடி இழப்பீடு
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், நாமக்கல் புறவழிச்சாலைத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.297 கோடி என்றும், முதலைப்பட்டி முதல் வள்ளிபுரம் வரை 22 கி.மீ. நீளத்திற்கு ஐந்து கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இத்திட்டத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த 146 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.104 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். முதல் கட்டப் பணிகள் ஏற்கெனவே முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.
தற்போது, இரண்டாவது கட்டமாக மரூர்பட்டி–வேட்டாம்பாடி மற்றும் மூன்றாவது கட்டமாக வேட்டாம்பாடி–வசந்தபுரம் பகுதிகளில் புறவழிச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், நான்காவது கட்டமாக வசந்தபுரம்–லத்துவாடி மற்றும் 5வது கட்டமாக லத்துவாடி–வள்ளிபுரம் பகுதிகளில் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
புதிய பேருந்து நிலையம் முதல் வேட்டாம்பாடி வரை உள்ள பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலப் பணிகள் 35% நிறைவடைந்துள்ளதாகவும், 2026 ஜூலைக்குள் பாலம் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசல்
நாமக்கல் நகரில் லாரி பாடி உற்பத்தி, கோழிப்பண்ணைகள், ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதாகவும், புறவழிச்சாலைகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தால் நகருக்குள் நெரிசல் குறைந்து, விபத்துகள் தவிர்க்கப்பட்டு சுற்றுப்புற கிராமங்களும் பயனடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் செ.பூபதி, தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) நபார்டு (ம) கிராமச் சாலைகள், (சென்னை) பி.செந்தில், கண்காணிப்பு பொறியாளர் (நெ), நபார்டு (ம) கிராமச்சாலைகள் சேலம் என்.எஸ்.சரவணன், கோட்டப் பொறியாளர் (நெ) கே.அகிலா, நாமக்கல் வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கம், நாமக்கல் டெய்லர் உரிமையாளர் சங்கம், நாமக்கல் தாலுக்கா லாரி உரியைமாளர்கள் சங்கம், லாரி பில்டர் அசோசியேசன் தலைவர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.